திருத்தணி அருகே சில பதின்வயதுச் சிறுவர்கள், ஒடிசா மாநில இளைஞரைக் கொடூரமாகத் தாக்கி அதைக் காணொளியாகப் பதிவுசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினரில் பலர் சரியான வழிகாட்டல் இன்றித் தவறான பாதையில் பயணிக்கும் போக்கு கவலை அளிக்கிறது.
ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சுராஜ் (34), டிசம்பர் 26 அன்று மின்சார ரயிலில் சென்னையிலிருந்து சென்றுகொண்டிருந்தார். நெமிலி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் வழியில் ஏறினர். அவர்கள் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் காணொளி பதிவிடுவதற்காக சுராஜின் கழுத்தில் அரிவாளை வைத்து அலைபேசியில் படம் பிடித்தனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுராஜை அவர்கள் தாக்கினர்; மேலும், திருத்தணியில் ரயில் நின்றவுடன், அவரைத் தனிமையான இடத்துக்கு இழுத்துச் சென்று அரிவாளால் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.
தீவிரக் காயம் அடைந்த சுராஜ் குறித்து பகுதி மக்கள் திருத்தணி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த நிலையில், முதலில் திருத்தணி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையிலும் அவர் சேர்க்கப்பட்டார்.