

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 85.15% வாக்குகள் பதிவாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கூடுதல் வாக்குப்பதிவு விகிதத்தைச் சாத்தியமாக்கிய வாக்காளர்கள் பாராட்டுக்குரியவர்கள். தேர்தலைச் சுமுகமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையமும், துணைநின்ற அரசு நிர்வாகமும் பாராட்டுக்குரியவை.
17ஆவது தமிழகச் சட்டமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இத்தேர்தலில் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததைக் காண முடிந்தது. 2021இல் கரோனா காலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 73.63% வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்குத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (Special Intensive Revision-SIR) ஒரு முக்கியக் காரணம். தகுதி இல்லாத வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது வாக்கு சதவீதம் அதிகரிக்கக் காரணமாகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஏப்ரல் 9இல் தேர்தல் நடைபெற்ற அசாம், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு அதிகரித்திருந்தது. அதே நாளில் கேரளத்தில் நடைபெற்ற தேர்தலில், 1987க்குப் பிறகு அதிகமாக வாக்குகள் பதிவாகியிருந்தன.
அதேபோல, ஏப்ரல் 23இல் தமிழகத் தேர்தலோடு, முதல் கட்டமாக 152 தொகுதிகளில் தேர்தலைச் சந்தித்த மேற்கு வங்கத்தில் 92.03% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பொதுவாக, தலைநகர் சென்னையில் வாக்கு சதவீதம் எப்போதும் குறைவாகவே இருக்கும்.