

உலகமே ஒரே நேரத்தில் பல போராட்டங்கள் நிகழும் திடலாகக் காட்சியளிக்கும் இன்றைய சூழலில், இந்தப் போராட்டங்களின் ஜனநாயகக் கூறுகளின்மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது, ‘பன்னாட்டு அமைதிக்கான கார்னகி’ அறக்கட்டளையின் ஆய்வு.
அனைத்துப் போராட்டங்களும் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை எனவும் அது தெளிவுபடுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளில் இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் வெடித்த மக்கள் போராட்டங்கள், உலக அளவில் கவனம் ஈர்த்தன.
இவை தற்போது பிற நாடுகளில் நிகழ்ந்துவரும் போராட்டங்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்குகின்றன. இன்னொரு புறம், நாட்டுக்கு எதிரான சக்திகள் போராட்டத்தின் பின்புலத்தில் இருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சியாளர்கள் அடக்குமுறைகளை ஏவுகிற போக்கு பரவலாகக் காணப்படுகிறது.
எனினும், அனைத்துப் போராட்டங்களுமே ஆட்சிமாற்றத்துக்காக நடத்தப்படவில்லை என்கிறது கார்னகி அறக்கட்டளையின் ‘குளோபல் புரொட்டெஸ்ட் ட்ராக்கர்’ என்கிற அமைப்பு.