

நாடு முழுவதும் லோகோ பைலட்டுகள் (ரயில் இன்ஜின் ஓட்டுநர்கள்) அண்மையில் நடத்தியிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம், அவர்கள் எதிர்கொண்டுவரும் பணிச்சுமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த கவனத்தை ஈர்த்திருக்கிறது. உலக அளவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அதிகத் தொலைவுள்ள ரயில் வழித்தடங்களைக் கொண்டது இந்தியா.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே துறை 19 மண்டலங்கள், 70 கோட்டங்களை (டிவிஷன்) உள்ளடக்கியது. கிராமப்புறங்களை இணைக்கும் வகையிலும், தொலைதூரப் பயணங்களுக்கு உதவும் வகையிலும் ரயில் சேவைகள் உள்ளன. நாள்தோறும் சராசரியாக 2 கோடி பேர் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த நிதியாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 6% அதிகரித்திருக்கிறது.
இத்தகைய சூழலில், ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்களைக் கொண்ட ரயில்வே துறையில், அண்மைக்காலமாகக் காலியிடங்கள் அதிகரித்துவருவது அதிகப் பணிச்சுமைக்குக் காரணமாகியிருக்கிறது.