

தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பு 13,495 ஹெக்டேர் விரிவடைந்திருப்பதாக வனத் துறை தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2021 – 2025 வரை தமிழகக் காட்டுப் பகுதிகளில் 100 மண்டலங்கள் காப்புக்காடுகளாக அறிவிக்கப் பட்டதால் காடுகளின் பரப்பளவு உயர்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு 26,585 சதுர கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. திண்டுக்கல், சேலம், நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள காட்டுப் பகுதிகள் காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளின் வாழிடங்களையும் நீர்நிலைகளையும் காட்டு உயிரினங்களின் தடங்களையும் பாதுகாப்பதுடன் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும் காப்புக்காடுகள் பராமரிப்பு உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.