

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சி முதன்முறையாக நம்பிக்கையூட்டும் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முயன்றதைத் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எனப் பேசிவந்த ரஷ்யா, அந்நாட்டின் மீது 2022 பிப்ரவரி 24இல் தாக்குதலைத் தொடங்கியது. இதுவரை உக்ரைனில் 70,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்துவதில் முனைப்பு காட்டினாலும் அவரது நகர்வுகள் பெரும் விமர்சனத்துக்கு வழிவகுத்தன.
வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நடத்திய விதம், உக்ரைனுக்கு இதுவரை செய்த ராணுவ உதவிகளுக்குப் பதிலீடாக அந்நாட்டின் கனிம வளங்களைப் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தைக் கடும் அழுத்தம் கொடுத்து நிறைவேற்றியது போன்றவை அவற்றில் சில.