

மக்கள் அதிக அளவு ஆல்கஹாலைக் கொண்ட மருந்துகளை வாங்குவதற்கு மத்திய சுகாதாரத் துறை அண்மையில் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே இவை விற்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனை, மருந்துகளைத் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதை நிச்சயம் குறைக்கும்.
எளிதில் கரைக்கக்கூடிய தன்மைக்காகவும் உறக்கத்தைத் தூண்டுதல், மருந்தில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்தல் போன்றவற்றுக்காகவும் முதன்மை மருத்துவப் பொருளுடன் ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, எத்தனால் (எத்தில் ஆல்கஹால்) சேர்க்கப்பட்ட பல மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.
மருந்தில் ஆல்கஹாலைச் சேர்ப்பதில் நேர்கிற சிறு தவறும் மருந்தைக் கொடிய நஞ்சாக்கி விடும். 2025இல் மத்தியப் பிரதேசத்தில் கோல்டுரிஃப் என்கிற இருமல் மருந்தை அருந்திய 23 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தனர்.