

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டு, நியூயார்க் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் உலகை அதிரவைத்திருக்கிறது. இவ்விஷயத்தில் பெரும்பாலான நாடுகள் அமைதி காப்பதும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா, மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸின் காலத்தில் பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியது. அவருக்குப் பின்னால் அதிபரான நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக் காலத்தில் உணவுப் பற்றாக்குறை, ஆள்கடத்தல், போதைப்பொருள் புழக்கம் என வெனிசுலா சீரழிந்துவருவதாக மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து விமர்சித்துவந்தன. தேர்தல் முறைகேட்டில் மதுரோ ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலில் வெனிசுலா ஈடுபடுவதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டிவந்த நிலையில், ஜனவரி 3ஆம் தேதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டுக் கப்பல் மூலம் நியூயார்க்குக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.