

கறிக்கோழிக்கான வளர்ப்புக் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கைவிடுத்துக் கோழிப் பண்ணையாளர்கள் நடத்திவரும் உற்பத்திநிறுத்தப் போராட்டம் தொடர்வது வருந்தத்தக்கது. இந்தத் தொழிலில் பல்லாண்டுகளாக நீடிக்கும் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் 20,000க்கும் மேற்பட்ட பண்ணைகளும் கறிக்கோழி விற்பனைக்கான 66 பெருநிறுவனங்களும் உள்ளன.
ஆண்டுக்கு ஏறக்குறைய 55 கோடி கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விற்பனை நிறுவனங்கள் தங்களிடம் ஒப்பந்தம் செய்துகொள்ளும் கோழிப் பண்ணையாளர்களிடம் கோழிக்குஞ்சுகளை வழங்குவதும் பண்ணையாளர்கள் அவற்றை வளர்த்துக்கொடுத்து, அதற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்வதும் இதன் அடிப்படைச் செயல்பாடு.
நிறுவனங்கள் கோழித்தீவனங்களையும் மருந்துகளையும் வழங்கினாலும், அவற்றுக்காகப் பண்ணையாளர்கள் கூடுதலாகச் செலவழிக்க வேண்டியிருக்கிறது; மின்கட்டணம், தண்ணீர் வசதி, இடுபொருள்கள், பிற பராமரிப்புகள் போன்றவற்றுக்கான செலவுகளும் அதிகரித்துவிட்ட நிலையில், தற்போது ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் ரூ.1.08 என நஷ்டத்தைச் சந்திப்பதாகப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
2020இல் கறிக்கோழி வளர்ப்புக் கட்டணம் கிலோவுக்கு ரூ.3.50இலிருந்து ரூ.6.50 ஆக நிறுவனங்களால் உயர்த்தப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ள செலவினங்களுக்கு ஏற்பக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது தற்போதைய கோரிக்கை.