

தமிழகத்தில் ஒருபுறம் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, வலுவடைந்துவிட்ட சூழலில், இன்னொருபுறம் மழைப்பொழிவின் அளவு குறித்த கணிப்புகள் மாறிக்கொண்டே உள்ளன. கடைசிநேர மாறுதல்களுக்கு ஈடுகொடுத்து அரசு நிர்வாகம் செயல்பட வேண்டிய தருணம் இது.
வடகிழக்குப் பருவமழைதான் தமிழ்நாட்டுக்கு முக்கிய நீராதாரம். மறுபுறம், காலநிலை மாற்றம் தொடர்பான அசாதாரண நிகழ்வுகளால் மழைப்பொழிவின் விகிதம் அதிகரித்துத் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குதல், பயிர்கள் மூழ்குதல் போன்ற பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடரும் நிகழ்வுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், முதன்முதலாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கூடுதல் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜூலை இறுதியில் தமிழக ஊரக வளர்ச்சி - நீராதாரங்கள் துறை அமைச்சர் என்.ஆனந்த், சென்னையிலும் அதைச் சுற்றிலும் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளைத் தொடங்கிவைத்து, சில இடங்களில் ஆய்வுசெய்தார்.
அடிப்படைப் பணிகளோடு, மழைநீரால் சேதமுறக்கூடிய சாலைகளில் முன்கூட்டியே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், மழையை ஒட்டிக் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவையும் வழிகாட்டுக்கூட்டத்தில் அவரால் ஆய்வு செய்யப்பட்டன.