நேபாள வெள்ளம் உணர்த்தும் முக்கியப் பாடம்

நேபாள வெள்ளம் உணர்த்தும் முக்கியப் பாடம்
Updated on
2 min read

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் தீவிரத்தன்மையும் அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் பேரிழப்புகளும் உலகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்திருக்கின்றன.

இமயமலைப் பகுதியில் அபாயங்கள் அதிகரித்துவருவதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கும் இந்தப் பேரிடர், இந்தியாவுக்கும் முக்கியப் பாடத்தை உணர்த்தியிருக்கிறது.

ஆகஸ்ட் 26 அன்று காலை, திபெத் எல்லைக்கு அருகில் உள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் மிகப்பெரிய திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள், நீர்மின் நிலையங்கள் உட்பட ஏராளமான கட்டிடங்கள், வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. பலர் உயிரிழந்தனர்.

நில அதிர்வால் ஏற்பட்ட பேரிடர் எனத் தொடக்கத்தில் கருதப்பட்டாலும், திபெத்தில் உள்ள லெண்டே (Lhende) ஆற்றைப் பனிப்பாறை மறித்ததால் போட்டே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இமயமலைச் சரிவுகள் இயல்பாகவே நிலையற்ற தன்மை கொண்டவை. ஆயிரக்கணக்கான பனியாறுகளைக் கொண்ட நேபாளம், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடு.

நிலநடுக்கம், பனியாறு உருகுதல் என அவ்வப்போது நிகழும் பேரிடர்கள், ஏற்கெனவே பொருளாதார வளர்ச்சியில் தளர்வாக நடைபோடும் அந்நாட்டை மேலும் முடக்கிப்போடுகின்றன.

இமயமலைப் பகுதிகள் உலகச் சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைந்து வருகின்றன எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், சீனா ஆகிய இமயமலை நாடுகள் இந்த வெள்ளத்திலிருந்து முக்கியப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ராணுவ நடவடிக்கைகளைத் தாண்டி, இயற்கைப் பேரிடர்களுக்கான அறிகுறிகளை, எச்சரிக்கைகளைப் பகிர்ந்துகொள்வது, பாதிப்புகளை மட்டுப்படுத்துவது, நிவாரணப் பணிகள் தொடர்பான கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என வெளியுறவு வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாகச் செயல்படுவது அவசியம்.

இந்த வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கையை சீனா விடுக்கவில்லை எனத் தொடக்கத்தில் நேபாளம் முன்வைத்த விமர்சனம் கவனிக்கத்தக்கது. எனினும், திபெத் பகுதியில் இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளதாக சீனா எச்சரித்தது.

அதேபோல, தங்கள் மீட்புக் குழுக்கள் தனியாகவே தேடுதல் பணிகளையும் மீட்புப் பணிகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டவை என்பதால், பிற நாடுகளின் குழுக்களுக்கு அனுமதி கிடையாது என்று தொடக்கத்தில் கூறிய நேபாளம், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் குழுக்கள் இப்பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றன.

நேபாள வெள்ளத்தின் தொடர்ச்சியாக பிஹார், உத்தரப் பிரதேச ஆறுகளிலும் வெள்ளம் ஏற்படலாம் எனக் கருதப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக அந்த ஆபத்து நேரவில்லை.

2013இல் உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் அமைந்திருக்கும் கேதார்நாத் புனிதத் தலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 6,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், 2023இல் அதே மாநிலத்தின் ஜோஷிமத் பகுதியில் கட்டிடங்கள் புதையுண்ட சம்பவம் போன்றவை இமயமலைப் பகுதியின் ஆபத்துகளை இந்தியாவுக்கு உணர்த்தியவை.

இந்தச் சூழலில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரிடரிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இமயமலை மாநிலமான சிக்கிமில் உள்ள அனைத்துப் புதிய நீர்மின் திட்டங்களையும் கைவிடுமாறு சிக்கிமில் உள்ள இரண்டு இனக் குழுக்களின் அமைப்பு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற குரல்களின் பின்னே இருக்கும் நிதர்சனத்துக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டும். பேரிடர்களின் சங்கிலித் தொடர் நிகழ்வுகளை நன்கு உணர்ந்து, அவற்றின் பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவும் தீவிரமாக இறங்க வேண்டிய தருணம் இது!

நேபாள வெள்ளம் உணர்த்தும் முக்கியப் பாடம்
ஜார்க்கண்டில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அனுமதி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in