

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் ஏறக்குறைய 1,500 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவுக்கு ஒரு முக்கியமான பாடமும் உணர்த்தப்பட்டிருக்கிறது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஜூன் 24 அன்று மாலை சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. 7.1 ரிக்டர் அளவு கொண்ட முதல் நிலநடுக்கம், தலைநகர் கராகாஸிலிருந்து மேற்கே 168 கிலோமீட்டர் தொலைவில், 22 கிலோமீட்டர் ஆழத்தில் உண்டானது.
ஒரு நிமிடத்துக்குப் பிறகு, 7.5 ரிக்டர் அளவு கொண்ட இரண்டாவது நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதில் கராகாஸ், அரகுவா, கராபோபோ உள்ளிட்ட மாநிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
ஏராளமான கட்டிடங்கள் இடிந்துவிழுந்த நிலையில், இதுவரை 1,500 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கானோர் சிக்கியதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.