

சட்ட விரோதமான கல் குவாரிகளுக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் கரூர் ஜெகநாதன் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி களுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
குவாரிகளை ஒழுங்குபடுத்துவதற்காகத் தனிநபர்கள் போராட வேண்டிய சூழல் இனியாவது முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. கரூர் மாவட்டம் காளிப்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன், அந்த வட்டாரத்தில் சட்ட விரோதமாக இயங்கிவந்த கல் குவாரிகளை எதிர்த்து அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தார்.
குப்பம் என்கிற பகுதியில் உரிமம் முடிவடைந்த பிறகும் தொடர்ந்து செயல்பட்ட ஒரு குவாரி, ஜெகநாதனின் புகார் காரணமாக மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குவாரி உரிமையாளர் செல்வகுமாரின் தரப்பு, ஜெகநாதன் மீது 2022இல் மினி வேனை ஏற்றிக் கொலை செய்தது. இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
அண்மையில் இவ்வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி இளவழகன், குவாரி உரிமையாளர் உள்பட மூவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் அபராதம் அல்லது கூடுதல் சிறைத்தண்டனையும் வழங்கியுள்ளார். இயற்கை வளத்தைக் கொள்ளை அடித்ததோடு, அதைத் தடுக்க முயன்றவரைக் கொலை செய்யவும் தயங்காதவர்களின் பண வெறிக்கு இந்தத் தீர்ப்பு தகுந்த பாடம் புகட்டியுள்ளது.