

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான ‘கோரோஹெல்த் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிடெட்’ கொச்சி, கோழிக்கோடு கிளை அலுவலகங்களில் பணிபுரிந்துவந்த 800-க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கேரள அரசின் தலையீட்டுக்குப் பிறகும் அந்நிறுவனம் காட்டிய பிடிவாதம் தொழிலாளர் நலன் குறித்த விவாதத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. சுகாதாரப் பகுப்பாய்வு, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான ‘கோரோஹெல்த் இன்ஃபோடெக்’, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிவருகிறது.
மருத்துவக் குறியீட்டுப் பணியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் சென்னை, ஹைதராபாத், கொச்சி உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கொச்சி, கோழிக்கோடு நகர அலுவலகங்களில் பணிபுரிந்துவந்த 800-க்கும் மேற்பட்ட ஊழியர்களை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அண்மையில் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது.