

சென்னை அடையாறு அருகே, அண்மையில் பைக் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்து உயிரிழந்த சம்பவம், மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி அதிகாலையில் சென்னை அடையாறில் உள்ள ஐஐடி மேம்பாலத்தின் தடுப்பை மீறிக் கீழே விழுந்ததில் ஸ்ரீகுகன் என்னும் இளைஞர் உயிரிழந்தார். சிசிடிவி பதிவுகள், சமூக ஊடகக் காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு காவல் துறை நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் பைக் பந்தயத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தப் பந்தயத்தில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது தெரியவந்த நிலையில், அவர்களில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்; 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ‘ஆபத்தான முறையில் பைக் பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகள் தொடரும்’ எனக் காவல் துறை எச்சரித்துள்ளது.
கைதான சில இளைஞர்களின் பெற்றோர், ‘ஒன்றுமில்லாத விஷயத்துக்காக இத்தகைய நடவடிக்கையா?’ என்று வாதம் செய்த காணொளி, மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.