

தமிழ்நாட்டில் 2025இல் வாகனப் பதிவு கணிசமாக அதிகரித்திருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த வளர்ச்சி சீரற்றதாக இருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்திருக்கிறது. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 21 லட்சத்து 18 ஆயிரத்து 486 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இது 2024இல் பதிவான வாகனங்களின் எண்ணிக்கையை விடவும் 8.4% அதிகம். இவற்றில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 16.4 லட்சம். கார் முதலான நான்கு சக்கர வாகனங்கள், டிரக், லாரி போன்ற கனரக வாகனங்களின் எண்ணிக்கை 4.2 லட்சம். இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், மதுரை, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் மட்டும் 40% வாகனப் பதிவுகள் நிகழ்ந்துள்ளன.
சொந்தப் பயன்பாட்டு வாகனங்களைப் பதிவுசெய்ய ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வாகனங்களைக் கொண்டுசெல்லத் தேவை இல்லை என்கிற புதிய விதி 2025 டிசம்பர் 1இல் அமலுக்கு வந்ததில் இருந்து வாகனப் பதிவு பன்மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.