

அண்மையில் ஆந்திர மாநிலத்தில், கலப்படம் செய்யப்பட்ட பாலை அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு தரநிலைக் கண்காணிப்பு உரிய வகையில் செயல்படுத்தப்படுகிறதா என்னும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திரவரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பத்துக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், பால் விற்பனை செய்த நபர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார். அவர் விநியோகித்த கலப்படப் பாலைப் பயன்படுத்திய 110 குடும்பங்களைச் சேர்ந்த 315 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.
இத்தகைய சம்பவங்கள் புதிதல்ல. 2008இல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பள்ளியொன்றில் கலப்படப் பாலை அருந்திய 6 குழந்தைகள் மரணமடைந்தது ஓர் உதாரணம். கலப்படமான பாலைப் பயன்படுத்தியதால் செரிமானப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் மக்கள் அவதிப்படுவது அவ்வப்போது செய்திகளில் இடம்பெற்றுவருகிறது.