

தமிழகம் 2024-2025இல் விவசாயத்தில் வீழ்ச்சி அடைந்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கடன் சுமை, உணவுப் பற்றாக்குறை, விலையேற்றம் போன்ற பிரச்சினைகள் தீவிரமாவதற்கு முன், தீர்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் கையேடு அண்மையில் வெளியிடப்பட்டது.
அதில் 2024-2025இல் தமிழகத்தில் விவசாயம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கிச் சென்றுகொண்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஓர் ஆண்டில் மொத்த உற்பத்திப் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் மதிப்பிலிருந்து அவற்றை உருவாக்குவதற்கான உழைப்பு, மூலப்பொருள்களின் மதிப்பைக் கழித்து ‘கூட்டப்பட்ட மொத்த மதிப்பு’(Gross Value Added) கணக்கிடப்படுகிறது. இம்மதிப்புக்கும் முந்தைய ஆண்டுக்கான மதிப்புக்குமான வேறுபாடுதான் வளர்ச்சி எனக் கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தில் 2020-2021இல் 4.5%ஆக இருந்த விவசாய வளர்ச்சியானது அடுத்தடுத்த ஆண்டுகளில் 5.6%, 2.5%, 3.9% என ஏற்ற இறக்கங்களைக் கண்டது. 2024-2025இல் -0.09% என எதிர்மறை வளர்ச்சியை அடைந்துவிட்டது. விவசாயத் துறையில் சத்தமே இன்றி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் வெளிப்பாடு இது.
இதே காலக்கட்டத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என மே, 2025இல் மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்கத் துறை தெரிவித்தது.