

புத்தாண்டு தொடங்கியிருக்கும் நிலையில், ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட’த்தை அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் ஜனவரி 6 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாகப் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் - கூட்டமைப்புகள் அறிவித்திருந்த நிலையில் அதற்குச் சில நாள்கள் முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
2003ஆம் ஆண்டுக்கு முன்புவரை தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அரசு ஊழியர்கள் அனைவரையும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியது.