

வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக நம்பவைத்து அரங்கேற்றப்படும் மோசடிகள் குறித்து மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இத்தகைய மோசடிகள் தனிநபர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல, நாட்டின் வங்கிக் கடன் கட்டமைப்பையே கேள்விக்கு உள்ளாக்கிவிடும் என்கிற ரிசர்வ் வங்கியின் கூற்று கவனத்துக்கு உரியது.
வாடிக்கையாளர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடும் இணையவழிக் குற்றங்களும் டிஜிட்டல் கைது நடவடிக்கைகளும் பெரும் அச்சுறுத்தல்களாக இருக்கும் இன்றைய சூழலில், போலியான கடன் தள்ளுபடி வாக்குறுதி மோசடிகளும் அவற்றோடு சேர்ந்துகொண்டுள்ளன.
சமூக வலைத்தள விளம்பரங்கள், வாட்ஸ்அப் செய்திகள், யூடியூப் காணொளிகள், தொலைபேசி அழைப்புகள் வழியே இந்த மோசடிகள் நடத்தப்படுகின்றன. வங்கிகளிலும் நிதிநிறுவனங்களிலும் பெறப்பட்டுள்ள கடன்களைச் சட்டபூர்வமாகத் தள்ளுபடி செய்ய உதவுவதாக மக்களுக்கு மோசடி நபர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றனர்.
அதற்கான தரகு, முன்தொகை உள்ளிட்ட பெயர்களில் கணிசமான தொகையை மக்களிடமிருந்து பெறுகிற இவர்கள் சொன்னதைச் செய்வதில்லை. மக்கள் இவர்களிடம் பணத்தை இழப்பதோடு, இவர்களது வாக்குறுதியை நம்பிக் கடனுக்கு வட்டி செலுத்தாமல் இருப்பதால் கூடுதல் கடன் சுமைக்கும் உள்ளாகின்றனர்.