

ஆயுள் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100% அனுமதிக்கப்போவதாக மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது. இத்தகைய சூழலில், இதன் சாதக பாதகங்களை அரசு முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும் என்கிற குரல்கள் எழுந்திருக்கின்றன.
இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 2015இல் 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாகவும் 2021இல் 74 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.
இனி 100% அனுமதிக்கலாம் என்கிற ‘காப்பீட்டுச் சட்டம் (திருத்தங்கள்) 2025 மசோதா’வுக்கு டிசம்பர் 12 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது சட்டமாக நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் இயங்கும் ஓர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முதலீட்டில் 100 சதவீதம்கூட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பங்களிக்க முடியும்.