

வாடிக்கையாளர்களுக்குப் பத்து நிமிடங்களில் பொருள்களை விநியோகிப்பதை விரைவு விநியோகச் சேவை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என மத்தியத் தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தங்களின் பிற நீண்ட காலக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்கிற நம்பிக்கையை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.
செயலிகள் மூலமாக உணவுகள், காய்கறி, மளிகைப் பொருள்கள் போன்றவற்றை நேரடியாக விநியோகிக்கும் ஊழியர்களின் (gig and platfrom workers) எண்ணிக்கை, 2020-2021ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 77 லட்சம் பேர் என நிதிஆயோக் அறிக்கை கூறுகிறது. இந்த சேவையை வழங்கும் நிறுவனங்கள் தொலைவு, நேரம் போன்றவற்றின் அடிப்படையில் ஊழியர்களுக்கு விற்பனைப் பங்கு (கமிஷன்) அளிக்கின்றன.
குறிப்பிட்ட இலக்கை எட்டினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது போன்ற அம்சங்கள் ஊழியர்களை ஈர்க்கின்றன. எனினும் வேலை வழங்கப்படுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, இலக்கை முடிப்பது போகப்போகக் கடினமாக்கப்படுவது, கமிஷனாகக் குறைவான தொகை அளிக்கப்படுவது போன்றவை ஊழியர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கின்றன.