கோப்புப்படம்
பணிபுரிபவர்கள், உயர் கல்வி பயில்பவர்களுக்கான தங்கும் விடுதிகளைக் குடியிருப்பு வளாகங்களாக அரசு கருத வேண்டும் எனவும் அவற்றுக்கு வணிகப் பிரிவின் கீழ் வரி வசூலிக்கக் கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, விடுதியை நடத்துபவர்கள் மற்றும் தங்கியிருப்பவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க வழிவகுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை அறிமுகமான காலக்கட்டத்தில், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்த பெருந்திரளான இளைஞர்கள் வசிக்க, உணவும் உறைவிடமும் அளிக்கும் விடுதிகள் (paid guest hostels for working men and women) திறக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் ஏறக்குறைய 25,000 விடுதிகள் செயல்படுகின்றன. இவை வணிகப் பிரிவின்கீழ் வகைப்படுத்தப்பட்டிருப்பதால், அதற்கேற்ற சொத்து வரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் விதிக்கப்படுகிறது.