

ஆர்.என்.கே. என அழைக்கப்பட்ட தோழர் இரா.நல்லகண்ணு மூப்புக் காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு அவர் சார்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்துக்கும் நேர்ந்த பேரிழப்பு.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டதும் நல்லகண்ணு பிறந்ததும் ஏறக்குறைய ஒரே காலக்கட்டத்தில்தான் நிகழ்ந்தன. காலரீதியிலான இந்த ஒற்றுமைக்கு, நல்லகண்ணுவின் செறிவான அரசியல், சமூக, இலக்கியப் பணிகள் அணிசேர்க்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர் நல்லகண்ணு. இவருடன் சேர்த்து ஒன்பது பிள்ளைகள். ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் ஓர் அலுவலராக இருந்த தந்தை, நல்லகண்ணுவை அரசுப் பணியில் அமர்த்த விரும்பினார்.
ஆனால், விடுதலைப் போராட்டமே நல்லகண்ணுவை ஈர்த்தது. பள்ளியில் பயிலும் காலத்திலேயே காங்கிரஸ் இயக்கம் சார்பாகச் செயல்படத் தொடங்கிய நல்லகண்ணு, உயர்கல்விக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
படிப்பு பாதியில் நின்றாலும், புத்தகங்களும் போராட்டங்களும் அவரை ஒரு பக்குவமான சமூகச் செயல்பாட்டாளர் ஆக்கின. வரலாறு, பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் உலகளவிலான பார்வை அவருக்கு இருந்தது.
1952இல் நல்லகண்ணு உள்படச் சிலருக்கு திருநெல்வேலிச் சதி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நெடிய சிறை அனுபவம் ஆஸ்துமாவுக்கு இணையான சிக்கல்களை அவருக்குப் பரிசாகத் தந்தது.
இருந்தபோதும் சிறைகளின் மோசமான நிலை, அதிகாரிகளின் எதேச்சதிகாரம், தூக்குத்தண்டனைக் கைதிகளின் முடிவு போன்றவைதான் சிறைக்காலம் குறித்த அவரது நினைவுகூரல்களில் முன்னிற்குமே அன்றி, சொந்த வேதனைகளுக்கு இடம் இருக்காது.
சிக்கனத்தோடு நடந்துகொள்வதும் சீர்பட வாழ்வதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதற்கு நல்லகண்ணு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சமூக நலனுக்கும் கட்சி வளர்ச்சிக்கும்தான் அவர் முன்னுரிமை அளித்தார். குடும்பம் அவருக்கு இரண்டாம்பட்சமானதுதான்.
ஆனால், அந்த வரையறைக்கு உட்பட்டு, அவர் தனது குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவாகச் செய்தார். தனது போராட்டச் செயல்பாடுகளால் மனைவிக்கும் மகள்களுக்கும் நெருக்கடி வந்துவிடக் கூடாது எனக் குடும்பத்திலிருந்து அவர் விலகி இருந்த நாள்கள் எண்ணற்றவை.
அப்போதும் படிப்பு, வேலை தொடர்பான வழிகாட்டல்களை வழங்கிவந்த தந்தையாகவே அவரின் மகள்கள் அவரை நினைவுகூர்கின்றனர். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளமாக உள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 1960களின் பிற்பகுதியில் நல்லகண்ணு உள்ளிட்டோர் பல்வேறு உரிமைகளைப் போராடிப் பெற்று அதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக நல்லகண்ணு இரண்டு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
அத்துமீறல்களோ, மடைமாற்றங்களோ இன்றிப் போராட்டத்தை வழிநடத்துவதற்கான எடுத்துக்காட்டுகளாக அவை வரலாற்றில் என்றைக்கும் இடம்பிடித்திருக்கும். நல்லகண்ணு ஒரு சிறந்த எழுத்தாளர், நேர்த்தியான பேச்சாளர்.
மக்களை உணர்ச்சிவசத்துக்கு உள்ளாக்காமல் முதிர்ச்சியை நோக்கி நகர்த்தும்வகையில்தான் அவரது பேச்சும் எழுத்தும் இருக்கும். பொதுவுடைமைக் கொள்கையைத் தமிழ்நாட்டின் பண்பாட்டு மதிப்பீடுகளோடு பொருத்தி அணுகுபவராகவும் அவர் இருந்தார்.
தேர்தல் அரசியலில் தமிழக வாக்காளர்கள் அவருக்குத் தோல்வியையே அளித்தனர். எனினும், சமூகத்தை விடாப்பிடியாக நேசித்தார். நல்லகண்ணு இந்தச் சமூகத்துக்கு மிகவும் அரிதான ஒரு வரவு.
அவருக்கு அஞ்சலியாகப் பல நூல்களும் நினைவுச்சின்னங்களும் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அவரது வாழ்க்கையை வியப்பதைக் காட்டிலும், பல்வேறு தளங்களில் அதைக் கடைப்பிடிப்பதுதான் அந்த மகத்தான மனிதருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும்.