

ஈரானில், அரசுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் உச்சமடைந்திருக்கும் நிலையில், அந்நாட்டில் இனி என்ன நடக்கும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. கூடவே, நீண்ட கால நட்பு நாடு என்கிற வகையில் ஈரானில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் இந்தியாவிலும் தாக்கம் செலுத்துவதால், இதை ராஜதந்திரரீதியில் கையாள வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதைத் தடைசெய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஈரான் அணு ஒப்பந்தம், ஒபாமா ஆட்சிக் காலத்தில் 2015இல் கையெழுத்தானது. ஆனால், 2018இல் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அப்போதைய அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
எனினும், 2025இல் மீண்டும் அதிபரான டிரம்ப், இந்த ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டினார். ஆனால், 2025 ஜூனில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிகழ்ந்த மோதலைத் தொடர்ந்து நிலைமை மோசமானது. ஏற்கெனவே, ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துவந்த அமெரிக்கா, மேலும் தடைகளை விதித்தது ஈரானுக்குக் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.