

கடந்த ஆண்டு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் நாட்டில் முதலிடம் பெற்றது தமிழ்நாடு. 266 பேரின் உறுப்பு தானத்தால், மரணத்தின் விளிம்புவரை சென்ற 1,476 பேர் மறுவாழ்வு பெற்றனர். ஆனாலும், உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இங்கு பரவலாகவும் போதுமானதாகவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
உறுப்புமாற்று அறுவைசிகிச்சையில் உலகளவில் அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியா மூன்றாம் இடத்தை வகிக்கிறது. 2024இல் நம் நாட்டில் 18,911 உறுப்புமாற்று அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்கிறது, மத்திய அரசின் தேசிய உறுப்பு - திசு மாற்று அமைப்பு (NOTTO).
உறுப்புமாற்று அறுவைசிகிச்சைத் தரவுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘டிரான்ஸ்டான்’ (TRANSTAN) செயலி தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இதில் இதுவரை 23,819 பேர் உறுப்புதானப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 2024, 2023, 2022ஆம் ஆண்டுகளில் முறையே 1446, 935, 878 உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.