

ஆஸ்திரேலியாவில் யூத மதக் கொண்டாட்ட நிகழ்வின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகை அதிரவைத்திருக்கிறது. இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் யூத எதிர்ப்பு மனநிலை அதிகரிப்பதன் சாட்சியம் எனக் குரல்கள் எழுந்திருக்கின்றன.
டிசம்பர் 14 அன்று மாலை, நியூ செளத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத மதப் பண்டிகையான ஹனுகா கொண்டாட்ட நிகழ்வின்போது திடீரெனத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
எட்டு நாள் ஹனுகா திருவிழாவின் தொடக்கத்தைக் கொண்டாடும் ‘சானுகா பை தி சீ’ நிகழ்வுக்காகக் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோரில் 15 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய ஒருவர் சம்பவ இடத்திலேயே காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் கைதுசெய்யப்பட்டார்.
போன்னிரிக் பகுதியில் வசித்துவந்த சாஜித், அவரது மகன் நவீத் அக்ரம் ஆகிய இருவரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்டவரும் பழ வியாபாரியுமான சாஜித், 10 ஆண்டுகளாக உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர் என்று கூறப்படுகிறது.