

உலகின் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சை சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலையுறச் செய்திருக்கிறது. இப்பிரச்சினையில் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு நம்பிக்கை அளிக்கிறது.
ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா, டெல்லி ஆகிய மாநிலங்களில் படர்ந்திருக்கும் ஆரவல்லி மலைத்தொடர் சுமார் 200 கோடி ஆண்டுகள் பழமையானது. ஆண்டுக்கு 50 – 70 செ.மீ. மழையைத் தருவிக்கக்கூடியது. புதர்க்காடுகள் மண்டியுள்ள ஆரவல்லியானது தார் பாலைவனம் மேலும் பரவாமல் தடுக்கிற இயற்கை அரணாக விளங்குகிறது.
இந்தச் சூழலில் ஆரவல்லி தொடர்பான புதிய வரையறைகள் பேசுபொருளாகியிருக்கின்றன. குறைந்தபட்சம் 100 மீட்டர் (328 அடி) உயரத்தில் அமைந்தவை மட்டுமே ஆரவல்லி மலைக்குன்றாகக் கருதப்படும்; 500 மீட்டருக்குள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குன்றுகள் இருக்கிற பகுதியே ஆரவல்லி மலைத்தொடர் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் முதலில் இதை ஏற்றுக்கொண்டது.