

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்குத் தற்காலிக நடத்துநர்களை நியமிப்பதும் அதற்கான டெண்டர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருப்பதும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளன.
பணியாளர் பற்றாக்குறை, உதிரிபாகங்கள் தட்டுப்பாடு போன்றவற்றால் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி), தேவையான அளவுக்குப் பேருந்துகளை இயக்க முடியவில்லை எனக் கடந்த சில ஆண்டுகளாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில், நடத்துநர் பணியிடங்களுக்காக டீசல் பேருந்துகளுக்கு 1,797 பேரையும் மின்சாரப் பேருந்துகளுக்கு 1,500 பேரையும் ஒப்பந்த முறையில் நியமிப்பதற்கு ஜனவரியில் டெண்டர் விடப்பட்டது.
அதில் 1,797 பேரை நியமிப்பதற்கான டெண்டர் அண்மையில் எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை மாத ஊதியம் ரூ.27,679 என்கிற அடிப்படையில் ரூ.61.56 கோடி மதிப்பீட்டில் 11 மாத காலத்துக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.