

தமிழகத்தின் பல ஊர்களில் அண்மையில் அங்கன்வாடி ஊழியர் அமைப்புகள் நடத்திய ஒருநாள் அடையாளப் போராட்டம் பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பணிநிரந்தரம், நியாயமான ஓய்வூதியம் உள்ளிட்ட நீண்ட காலக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் இந்த ஊழியர்களுக்கு எப்போது விடிவுகாலம் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 54,439 மையங்களில் ஊழியர்களும் உதவியாளர்களுமாக ஏறக்குறைய 80,000 பெண்கள் பணிபுரிகின்றனர். ஏழு மாதத்திலிருந்து ஆறு வயது வரைக்குமான குழந்தைகளைப் பகலில் பராமரித்தல், அவர்களுக்குக் கற்பித்தல், மதிய உணவு அளித்தல் ஆகியவை இவர்களின் முதன்மைப் பணிகள்.
கூடுதல் பணிகளாகக் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோருக்குச் சுகாதாரத் துறை சார்ந்த நலத்திட்டங்களைக் கொண்டுசேர்ப்பது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் பிஎல்ஓக்களாகச் செயல்படுவது எனப் பல்வேறு பொறுப்புகளை சுமக்கின்றனர்.