நாடு முழுவதும் நடைபெறும் இணையக் கைது முறைகேடு மோசடிகள் தொடர்பாக மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ‘டிஜிட்டல் இந்தியா’ முன்முயற்சியின் விளைவால் திறன்பேசி, இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கும் சூழலில் இணைய வழியிலான பணப் பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளன.
இணையம் வழியாகவே அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது பரவலாகிவிட்ட நிலையில், இவற்றைப் பயன்படுத்தி இணையக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இந்தியா உள்படப் பல நாடுகளில் அதிகரித்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் புலனாய்வு, உளவுத்துறை அதிகாரிகள், நீதிபதிகள் போன்றோரைப் போல நடித்து ‘இணையக் கைது’ மோசடி முறைகேடுகளைப் பலர் நிகழ்த்தி வருகின்றனர்.