

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சென்னையில் 2024 ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குத் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஒன்பது நாள் அரசுமுறைப் பயணம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலான முதலமைச்சரின் முதல் வெளிநாட்டுப் பயணமாக மார்ச் 2022இல் துபாய் பயணம் அமைந்தது. அப்போது 6 நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி ரூ.6,100 கோடி முதலீடுகள் மூலம் 15,100 வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2021ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து தற்போது வரை 226 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.2,95,339 கோடி முதலீடுகள் உறுதியாகியுள்ளதாகவும் அவை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது 4.12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பயணத்தின் முதல்கட்டமாக, மே 24 அன்று சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர், அந்நாட்டின் அமைச்சர்களையும் தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதுடன், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொண்டார்; இதில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதைத் தொடர்ந்து ஜப்பானுக்குச் சென்ற முதலமைச்சர், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (ஜெட்ரோ) இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்; ஜப்பானைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய மாநிலங்களில், பொருளாதாரத்தில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி, 2020-21 நிதியாண்டில் ரூ.20.65 லட்சம் கோடி; இது 2022-23இல் ரூ.23.5 லட்சம் கோடியைத் தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பொருளியலை 2030-31 நிதியாண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி விகிதம், தற்போதைய சராசரியான 10% என்கிற அளவில் தொடரும்பட்சத்தில், 2034இல்தான் அந்த இலக்கை எட்ட முடியும். நிர்ணயிக்கப்பட்டிருக்கும் காலத்துக்குள் இலக்கை எட்டத் தேவைப்படும் வளர்ச்சி விகிதம் 16.5% என்பது கவனிக்கத்தக்கது.
2015இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்திலும், தான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த முதலீடுகள் குறித்து அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்பச் சுற்றுலா மேற்கொள்வதாக’ விமர்சித்தார். அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சராக இருந்தபோது பழனிசாமி மேற்கொண்ட பயணங்கள் குறித்துக் கேள்வி எழுப்பினார். இந்த அம்சங்கள் வீண் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துவிட்டன.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர்கள் எடுக்கும் முயற்சிகளில் அரசியல் கலப்பது தவிர்க்கப்பட வேண்டும். நிதி, தொழில் துறை உள்பட அரசாங்கத்தின் முக்கியத் துறைகளின் அமைச்சர்கள் மாற்றப்பட்ட பரபரப்பான சூழலைத் தொடர்ந்து நிகழ்ந்த முதலமைச்சரின் இந்தப் பயணம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் நீண்ட கால நலனுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.