

சோ
மாலியத் தலைநகர் மொகதீஷுவில் அக்டோபர் 14-ல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. வெடிகுண்டுகள் நிறைந்த ட்ரக் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின்போது, அருகில் இருந்த எரிபொருள் டேங்கர் மீது அந்த ட்ரக் மோதி வெடித்துச் சிதறியதால், சேதம் பன்மடங்கு அதிகரித்தது. பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
மொகதீஷு நகரில் கடந்த சில ஆண்டுகளாகவே ஓட்டல்கள், ராணுவக் கட்டிடங்கள் மீது அல்-கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தாக்குதல்களை நடத்திவருகிறது. இதுவரையிலான தாக்குதல்களிலேயே மிகக் கொடூரமான தாக்குதல் இது. இந்தத் தாக்குதலுக்கு அல்-ஷபாப் அமைப்பு இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும், அந்த அமைப்புதான் இதற்குக் காரணம் என்று அரசுத் தரப்பு கருதுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் அல்-ஷபாப் அமைப்பைப் பலவீனப்படுத்திவிட்டதாகவே சோமாலிய அரசு சமீப காலமாகக் கூறிவந்தது. ஆனால், கெரில்ல பாணித் தாக்குதல்கள் மூலம் அந்த அமைப்பு மீண்டும் பலம் பெற்றுவருகிறது. ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்துவரும் சோமாலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் இழப்புகளை ஏற்படுத்திவரும் அல்-ஷபாப் அமைப்பையும் அதன் ஆதரவாளர்களையும் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு, அந்நாட்டின் சமூகத்தில் பெரும் செல்வாக்கு கொண்ட இனக்குழுத் தலைமைகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவது அவசியம்.
சோமாலியாவில் ஆப்பிரிக்க ஒன்றியத் திட்ட’த்தின் (அமிசோம்) படைகளும் சோமாலிய அரசின் படைகளும் இணைந்து நடத்திய பலமான எதிர்த் தாக்குதல்களைத் தொடர்ந்து 2011 ஆகஸ்ட் மாதத்தில் மொகதீஷு நகரிலிருந்து அல்-ஷபாப் அமைப்பினர் தப்பியோடினர். அமெரிக்காவின் ஆதரவு - குறிப்பாக ட்ரம்ப் அதிபரான பின்னர் – சோமாலியாவுக்கு அதிகமாகவே கிடைத்தது. விளைவாக, சோமாலியாவின் பல்வேறு பகுதிகளில், முன்பு ஆயுதக் குழுக்கள் வசமிருந்த அதிகாரம் தற்போது அதிபர் தலைமையிலான அரசின் வசம் திரும்பிவந்தது. 1990-களில் தொடங்கிய வன்முறைச் சம்பவங்களிலிருந்தும் பதற்ற நிலையிலும் இருந்து நாடு மெல்ல மீண்டுவருகிறது என்றே எல்லோரும் நம்பிவந்தனர். ஆனால், இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்தும் சோமாலியாவில் சமூகத்துக்குள் நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தி மீண்டும் பலம் பெற்றுவருகிறது அல்-ஷபாப். இப்போது ஒட்டுமொத்த பார்வையும் அதிபரை நோக்கித் திரும்பியிருக்கிறது.
2017-ன் தொடக்கத்தில், நேரடியாக அல்லாமல், சோமாலிய சமூகத்தின் மூத்த தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழுவால், அந்நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது அப்துல்லாஹி முகமது. மக்களின் ஆதரவையும் இடைப்பட்ட காலத்தில் பெற்றிருக்கும் அவர் வன்முறைக் கலாச்சாரத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன. வன்முறை நிலவும் நாட்டில் வளர்ச்சியை எப்படி வளர்த்தெடுக்க முடியும்? வறுமையை எப்படி ஒழிக்க முடியும்?