சட்ட விரோத மது விற்பனை: முற்றுப்புள்ளி வைக்கட்டும் அரசு!

சட்ட விரோத மது விற்பனை: முற்றுப்புள்ளி வைக்கட்டும் அரசு!
Updated on
2 min read

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனை, அதுதொடர்பான குற்ற நிகழ்வுகள் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் கவலை அளிக்கின்றன. இது போன்ற குற்றங்களைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றன.

அண்மையில் விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து, 23 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சுவடுகளே இன்னும் மறையவில்லை. அதற்குள் கோவை மாவட்டத்தில் அதிக விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்டதாகவும், இதில் ஆளுங்கட்சியினருக்குத் தொடர்பு இருப்பதாகவும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புகார் கூறியுள்ளது; தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது வாங்கிக் குடித்த இருவர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில், அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருந்ததாகப் பிணக்கூறாய்வை மேற்கோள் காட்டி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

கோவை, தஞ்சாவூர் என இந்த இரண்டு நிகழ்வுகள் குறித்த முழு உண்மையை வெளிக்கொணர வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது. அதேவேளை, இந்த நிகழ்வுகள் மது விற்பனையில் விதிமீறல்கள் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் நண்பகல் 12 மணிக்குத்தான் திறக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூரில் மரணமடைந்த இருவருக்கும் அதற்கு முன்பே, அரசு அங்கீகாரம் பெற்ற டாஸ்மாக் பாரில் மது கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாடு முழுவதுமே மதுபானக் கூடம் வசதிகொண்ட மதுக்கடைகள் பலவற்றில் சட்ட விரோதமாகக் காலை வேளையிலிருந்தே மது விற்பனை செய்யப்படுவதாகவும், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளன. இதன் பின்னணியில் செல்வாக்குப் பெற்ற உள்ளூர் அரசியல்வாதிகளின் பங்கு இருப்பதையும் மறுக்க முடியாது. மதுபானக் கூடங்களை அரசியல்வாதிகள்தான் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறார்கள். மதுபானக் கூடங்களுக்கு வெளியேயும் மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதில் அரசியல்வாதிகளின்-குறிப்பாக ஆளுங்கட்சியினரின் பங்கு இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த விவகாரத்தில், 1,970 பேர் பணியிட மாற்றமும், 852 பேர் பணியிடைநீக்கமும் செய்யப்பட்டனர் என்றும், சட்ட விரோதமாகச் செயல்பட்ட மதுபானக் கூடங்களிலிருந்து 14,334 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 798 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். தற்போது 1,977 பேர் மீது நடவடிக்கை எடுத்து 5.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 5,380 டாஸ்மாக் கடைகளும், அவற்றுடன் இணைந்து 3,240 மதுபானக் கூடங்களும் இயங்கிவரும் நிலையில், சட்ட விரோத விற்பனையைத் தடுத்து நிறுத்தத் தீர்க்கமான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய மரணங்களுக்குப் பிறகு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள்மீது கடும் நடவடிக்கைகளைக் காவல் துறை முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்களில் நடைபெறும் சட்ட விரோத விற்பனையைத் தடுக்கும் நடவடிக்கையிலும் அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in