அதிகரிக்கும் அனல்: தப்பிக்க வழி உண்டா?

அதிகரிக்கும் அனல்: தப்பிக்க வழி உண்டா?
Updated on
1 min read

2023 முதல் 2027 வரையிலான ஐந்து ஆண்டுகளில், வெப்பநிலை பதிவாகக்கூடும் என உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization - WMO) எச்சரித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்கான ‘நில மேற்பரப்பு வெப்பநிலைப் போக்கு’களின் [Near-surface air temperature (Ta)] ஆண்டு சராசரி குறித்து மே 17 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக வானிலை மையம் கவலைதரும் இச்செய்தியைத்தந்துள்ளது.

புதைபடிவ எரிபொருள்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டின் விளைவால், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதனால் பன்னெடுங்காலமாகச் சீராக நிலவிவந்த புவியின் சராசரி வெப்பநிலை உயரத் தொடங்கியது. இது புவியின் சூழலியல் அமைப்புகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால் புயல், வெப்ப அலைகள் போன்ற காலநிலை நிகழ்வுகள் இன்று அதி தீவிரமடைந்திருக்கின்றன.

புவியின் வெப்பநிலை பதிவுசெய்யப்படத் தொடங்கிய 1880 முதல் இன்றுவரையிலான காலகட்டத்தில், சராசரி வெப்பநிலை கடந்த ஆறு ஆண்டுகளில் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் வானிலை அமைப்பின் இந்த எச்சரிக்கை கவனம் பெறுகிறது.

காலநிலை மாற்றத்தினால் விளையும் பாதிப்புகளிலிருந்து உயிர்களைப் பாதுகாக்க, புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்புக்கு 1.5 டிகிரி செல்சியஸ் என்கிற அளவை உச்சப் புள்ளியாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளார்கள். அப்போதுதான் பாதிப்புகளை மட்டுப்படுத்தி காலநிலை மாற்றத்துக்குத் தகவமைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில், பாரிஸ் ஒப்பந்தத்தின்படி உலக நாடுகளும் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இதுவொரு அறிவியல் உண்மை மட்டுமல்ல; அரசியல் கடப்பாடும்கூட.

எனினும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புவியின் சராசரி வெப்பநிலை, 1.1 டிகிரி – 1.8 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகக் கூடும் என வானிலை அமைப்பு கணிக்கிறது. அதாவது, புவியின் சராசரி வெப்பநிலை, தொழிற்புரட்சி காலகட்டத்துக்கு முந்தைய அளவான 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டுவதற்கு 66% வாய்ப்பு இருக்கிறது. இந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி என்பது, கடந்த ஐந்து ஆண்டுகளின் (2018-2022) சராசரியைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்கிற வானிலை அமைப்பின் கணிப்பு, பழைய நிலைக்குத் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

அதிகரிக்கும் வெப்பநிலையானது கடல்களிலும் முதன்மையான தாக்கம் செலுத்தும் என்பதால், புயல்கள் மேலும் தீவிரமடையும். மயன்மாரைத் தாக்கிய மோச்சா புயல், முதலில் கணிக்கப்பட்ட வேகத்தைவிடத் தீவிரமாக வீசி, மோசமான உயிர்-பொருள் சேதத்தை ஏற்படுத்திச் சென்றிருப்பது சமீபத்திய உதாரணம்.

உலக வானிலை அமைப்பின் இந்த அறிக்கையில், இந்தியாவுக்கான பிரத்யேகத் தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், பருவமழையில் மாறுபாடு, கடற்கரை, கடற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், வெப்ப அலைகள் எனக் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு இந்தியா முகங்கொடுத்தே ஆக வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பாதுகாப்பான எதிர்காலத்துக்குப் பாதையைச் சீரமைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் அடிப்படைக் கடமை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in