ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம்: தவறுகள் சரிசெய்யப்படுமா?

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம்: தவறுகள் சரிசெய்யப்படுமா?
Updated on
1 min read

பு

திய சரக்கு-சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்த 100 நாட்களுக்குப் பிறகு, சில திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்திருக்கிறது ஜிஎஸ்டி பேரவை. வரவேற்கத்தக்க விஷயம் இது. அதேசமயம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட விதம் காரணமாக பொருளாதாரத்தில் மந்த நிலையும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியில் சரிவும் ஏற்பட்டிருக்கும் சூழலில் மத்திய அரசுமீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. எனவே, தவறுகளைச் சரிசெய்துகொள்ளும் முயற்சியாகவும் இதைப் பார்க்க முடியும்.

ஜிஎஸ்டி காரணமாக தொழில், வர்த்தகத் துறையினர் எதிர்கொண்ட இன்னல்கள் கணக்கற்றவை. மாதமொருமுறை படிவங்களை நிரப்ப வேண்டியிருப்பதால் ஏற்படும் மன உளைச்சல், நேர விரயம் தொடங்கி தொழில்களே முடங்கிப்போகும் நிலைக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட விதம் இட்டுச்சென்றது. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் ஜவுளித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு இந்த உயர் வரி விதிப்பு பெரிய சுமையாக இருந்தது. இந்நிலையுல், ரூ.1.5 கோடி விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள் வரித் துறைக்கு தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கைகளைக் காலாண்டுக்கு ஒரு முறை அளிக்கலாம் என்பது போன்ற தளர்வுகள் சிறிய, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் வரித் துறைக்கும் பணிச்சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள் ஒரே சீரான – அதே சமயம் மிகக் குறைவான வரியைச் செலுத்தினால் போதும் என்ற அறிவிப்பும், அதனுடன் இணைந்த பிற சலுகைகளும் முக்கியமானவை. சிறிய நிறுவனங்களுக்கு இவை நம்பிக்கை ஊட்டுவதுடன், வரி செலுத்துவோர் எண்ணிக்கையையும் அதிகப்படுத்திக்கொள்ள உதவும். ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரித் தொகையைத் திருப்பித்தருவது விரைவுபடுத்தப்படும், அதற்காக போதிய நிதி ஒதுக்கப்படும் என்பதும் நம்பிக்கையை அளிக்கும். ஆனால், இவையெல்லாம் அறிவித்தபடி உடனுக்குடன் நடப்பது அவசியம்.

27 பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால், வணிகர்கள், தயாரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்களின் பல கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை. மக்களைப் பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அல்லது வரி குறைப்பு செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனும் குரல்கள் வணிகர்களின் தரப்பிலிருந்து எழுந்திருக்கின்றன. அதையும் ஜிஎஸ்டி பேரவை கருத்தில் கொள்ள வேண்டும்.

புதிய வரி நடைமுறைகளை அமல்படுத்துவதில் தவறுகள், விடுபடல்கள் இருந்தால் எடுத்த எடுப்பில் தண்டனை, அபராதம் என்று நடவடிக்கை எடுக்காமல், திருத்திக்கொள்ள வாய்ப்பும் அவகாசமும் தர வேண்டும். வரிவிதிப்பு நடைமுறைகளில் அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் முதலில் தகுந்த பயிற்சிகளை அளிக்க வேண்டும். அப்போதுதான் பிரதமர் சொன்னதுபோல் எளிமையான, நல்ல வரியாக இது திகழும். எல்லாவற்றுக்கும் மேல் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப இன்னும் பல இனங்களில் வரி குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இது உண்மையான சீர்திருத்தமாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in