

வ
ங்கிகளுக்குத் தரும் நிதிக்கான வட்டி வீதத்தை இப்போதுள்ள அளவிலிருந்து மாற்றுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு, தனது காலாண்டு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவை அறிவித்தது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்திருப்பது, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உற்பத்தியையும் விநியோகத்தையும் கட்டுப்படுத்த எடுத்திருக்கும் முடிவு, இந்தியச் சந்தையில் பண்டங்களின் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக இந்த முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்திருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க, கடன் தேவைப்படுவோர் வங்கிகளிடமிருக்கும் நிதியைக் கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் வட்டியை உயர்த்தாமலும் இருக்க முடிவு செய்துள்ளது.
சில மாநிலங்களில் வெள்ளம், சில மாநிலங்களில் வறட்சி ஏற்பட்டதால் காரிஃப் பருவ உணவு தானிய விளைச்சலில் குறைவு ஏற்படலாம். இந்நிலையில், உணவு தானியங்களின் விலை உயர்ந்துவிடக் கூடாது எனும் வகையிலேயே வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை எனலாம். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்துவதால் சில மாநிலங்களும் அதைப் பின்பற்றி மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டியிருக்கும். இது செலவுகளை அதிகரிப்பதுடன் வேறு திட்டங்களுக்கான நிதியை திசை திருப்பலாம். ஆனால், இந்தத் தொகையில் பெரும்பகுதி ஊழியர்களால் உடனடியாகச் செலவழிக்கப்படும் என்பதால் அது பொருளாதார வளர்ச்சிக்கே ஆதரவாக இருக்கும்.
பணக் கொள்கைக் குழு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு நுகர்வோர் விலைக் குறியீட்டெண் 2% அதிகரித்துள்ளது. 2017 ஜூனில் 1.46% ஆக இருந்தது ஆகஸ்டில் 3.36% ஆக உயர்ந்திருக்கிறது. செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி நடத்திய, ‘குடும்பங்களின் விலைவாசி உயர்வு எதிர்பார்ப்பு’ ஆய்வுகளும்கூட விலைவாசி நிச்சயம் உயரும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் பணவீக்க விகிதம் 4.2% முதல் 4.6% வரையில் இருக்கும் என்று குழு கணித்துள்ளது. மொத்த நிகர கூடுதல் வளர்ச்சியும் ஆகஸ்டில் எதிர்பார்த்த 7.3% என்ற அளவுக்குப் பதில் 6.7% ஆகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சியைத் தூண்டிவிட முதலீட்டு நடவடிக்கைக்குப் புதிய உத்வேகம் அளிக்க வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது குழு.
‘வாராக் கடன் சுமையால் தவிக்கும் அரசுத் துறை வங்கிகளுக்கு தேவைப்படும் மூலதனத்தை உடனடியாக வழங்க வேண்டும், பொதுச் சரக்கு சேவை வரி விதிப்பு நடைமுறைகளையும் விகிதங்களையும் மேலும் எளிமைப்படுத்த வேண்டும், செயல்படாமல் நின்றுபோயுள்ள மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்டி முழு அளவில் மீண்டும் நடத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கிக் குழு ஆலோசனை வழங்கியிருக்கிறது. பொருளாதாரம் தற்போது உள்ள மோசமான நிலையில் அரசு இவற்றை உடனடியாக அமல்படுத்துவது நாட்டுக்கு நல்லது!