

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறையாகப் பொறுப்பேற்றார். முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகான தமிழக அரசியல் போக்கில், மிக முக்கிய நிகழ்வாக திமுகவின் வெற்றியும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் கருதப்பட்டன.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்று ஸ்டாலின் கையெழுத்திட்ட கோப்புகளும், தன்னோடு இணைந்து செயலாற்ற அவர் தேர்ந்தெடுத்த செயலர்களின் பெயர்களும் அவருடைய அரசு எந்தப் பாதையில் செல்லும் என்பதையும் தெரிவிப்பதாக இருந்தன. அமைச்சரவை அறிவிப்போடு, துறைகளின் பெயர்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமும் கவனம் ஈர்த்தது.
ஆட்சிப் பொறுப்பேற்ற கையோடு கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாகக் களம் இறங்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது வரை என திமுக அரசின் தொடக்க காலச் செயல்பாடுகள் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தின. அதன் விளைவு உள்ளாட்சித் தேர்தல்களிலும் எதிரொலித்தது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் ஆட்சிக்குவந்த ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பில் இரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்யும் இந்த வேளையில், அதன் அடுத்தடுத்த செயல்பாடுகள் ஆழமான பரிசீலனைக்கு உரியவை; வரும் ஆண்டுகளில் அரசு பயணிக்கும் திசையைத் துலக்கப்படுத்துபவையும்கூட.
இந்த இரண்டு ஆண்டுகளில் முக்கியத்துவம் வாய்ந்த எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருந்தாலும், அவை தொடர்பான அதிகாரபூர்வச் செய்தியாளர் சந்திப்புகளை முதலமைச்சர் நடத்தவில்லை என்பது பொதுவான ஒரு குறையாக நிலவுகிறது.
நீட் தேர்வு ரத்து, மகளிர்க்கு உள்ளூர்ப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வாக்குறுதிகளோடு, மாவட்ட வாரியாகவும் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்து திமுக தேர்தலை எதிர்கொண்டது.
இவற்றில் சில முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டப்படும் சுணக்கம், செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆகியவை விமர்சனத்துக்கு வழிவகுத்துஇருக்கின்றன. மற்றொருபுறம், அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை அரசு முன்னெடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆட்சிக்குவந்த சில மாதங்களில் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் நிலையைஉணர்த்தும் வெள்ளை அறிக்கையைத் திமுக அரசு வெளியிட்டது. ‘5 டிரில்லியன் பொருளாதாரம்’ என்கிற கனவுடன் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு தன்னளவில் ‘1 டிரில்லியன் பொருளாதார’மாக உருவாகும் இலக்குடன் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான், அயல்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டைஈர்க்கும் முகாந்திரமாகத் தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைத் திமுக அரசு மேற்கொண்டது. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அத்திருத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
எந்த ஒரு கட்சியுமே ஆட்சிக்கு வந்த புதிதில் மக்களிடம் பெற்றிருக்கும் அதே அபிமானத்தை, ஆண்டுகள் செல்லச் செல்ல தொடர்ந்து பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மக்களின் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டாலும், அந்த ஆட்சி மீதான அன்பும் அபிமானமும் சற்றாவது குறையத்தான் செய்யும்.
இருப்பினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மக்களின் அதே அபிமானத்தை மீண்டும் முழுமையாகப் பெறுவதற்கு திமுக அரசு இப்போதிருந்தே முயல்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.