பொருளாதாரச் சரிவிலிருந்து மீள உறுதியான நடவடிக்கை தேவை

பொருளாதாரச் சரிவிலிருந்து மீள உறுதியான நடவடிக்கை தேவை
Updated on
1 min read

பொ

ருளாதாரச் சரிவுகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில், நிலைமையைச் சரிகட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. பொருளாதாரத்தைச் சீர்செய்ய, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கடந்த வாரம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்தார். எனினும், எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் விரிவாகச் சொல்லவில்லை. தனியார் முதலீட்டில் ஏற்பட்டிருக்கும் பற்றாக் குறையைச் சரிசெய்ய ரூ.50,000 கோடி அல்லது அதற்கும் அதிகமான தொகையை மத்திய அரசு ஒதுக்கவிருப்பதாகப் பேசப்படுகிறது.

2017-18-ம் ஆண்டுக்கான முதல் காலாண்டின்படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிவீதம் (ஜிடிபி) 5.7% ஆகக் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட, இந்த ஆண்டின் ஜூலை மாத வாக்கில் தொழில் துறை வளர்ச்சி 1.2% குறைந்திருக்கிறது. அத்துடன், ஜூலை மாதத்தில் 2.36%-ஆக இருந்த சில்லரை விலைப் பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்திலேயே 3.36% ஆனது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சார்பில் பண ஊக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளை மங்கச் செய்திருக்கிறது.

பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதும் இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவுக்கு முக்கியக் காரணங்கள் என்று விமர்சிக்கப்படுகிறது. அதேசமயம், பலர் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல், கடந்த ஐந்து காலாண்டுகளாகவே பொருளாதாரம் மந்தமடைந்துவருகிறது. இந்தச் சூழலில், பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட அளவிலான பின்னடைவைத்தான் தந்திருக்கின்றன எனலாம்.

உற்பத்தித் துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் கண்டுகொள்ளப்படாது எனும் நிலையில், பற்றாக்குறையைச் சரிசெய்ய அரசு வழங்கவிருக்கும் நிதியானது இந்தப் பிரச்சினைக்குத் தற்காலிக நிம்மதியைத் தாண்டி பெரிதாக எதையும் தர வாய்ப்பில்லை. மேலும், நிதிப் பற்றாக் குறையைச் சரிசெய்யும் இலக்கை எட்ட முடியாத பட்சத்தில் உலக அளவில் முதலீட்டாளர்களின் மத்தியில் இந்தியா மீதான மதிப்பு பாதிப்புக்குள்ளாகும்.

நிலம், தொழிலாளர்களுக்கான சந்தை ஆகியவற்றில் இருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் பல ஆண்டுகளாகவே பொருளாதார வளர்ச்சியைப் பின்னுக்கிழுத்துவருகின்றன. வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்ய முதலீட்டாளர்களுக்கு இது தடையாக இருக்கிறது. மேலும், தொழில் தொடங்குவதில் இருக்கும் இடையூறுகளும், தொழில் துறையை நிர்வகிக்கும் சட்டங்கள் காரணமாக உருவாகியிருக்கும் நிச்சயமற்ற தன்மையும் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இந்நிலையில், அதிக அளவில் இருக்கும் தனியார் சேமிப்பு விகிதத்தைப் போதுமான அளவுக்குப் பயன்படுத்திக்கொள்வதில் தனியார் முதலீட்டாளர்கள் தவறியதில் ஆச்சரியமில்லை.

ஆனால், அடுத்தடுத்து அமைந்த அரசுகள், இந்தப் பிரச்சினைகளைக் களைவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தவறிவிட்டன. பொருளாதாரம் மேலும் மேலும் மோசமாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில், இந்தச் சவால்களை எதிர்கொள்வதுடன், கடுமையான கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும் அரசு மேற்கொள்ள வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in