

சக்கர நாற்காலி கிரிக்கெட் உலகக் கோப்பையில் வென்றதாகத் தவறான தகவல் தந்து, சில அமைச்சர்களையும் தமிழக முதல்வரையும் மாற்றுத்திறனாளி ஒருவர் சந்தித்துப் பாராட்டு பெற்ற நிகழ்வு, உளவுத் துறையின் இயங்குமுறை குறித்த கேள்விகளை உருவாக்கியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத்பாபு, லண்டனில் நடைபெற்ற சக்கர நாற்காலி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைவர் என்று கூறிக்கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்திருக்கிறார். அமைச்சர் ராஜகண்ணப்பன் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்திருக்கிறார்.
இதற்குப் பிறகு கிடைத்த சில புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், வினோத்பாபு இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியில் இல்லை என்பதுடன், இப்படிச் சொல்லிச் சிலரிடம் பணம் பறித்துவந்திருக்கிறார் என்பதும், கடையில் விலைகொடுத்து வாங்கிய கோப்பையுடன் முதல்வரைச் சந்தித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றதாகத் தவறான தகவல் தந்து, மாநில அரசின் மிக உயரிய பதவியில் இருக்கும் முதல்வரைச் சந்திக்க முடிந்திருப்பது, அரசியல் பதவிகளை வகிப்போருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவும் போதாமைகளை வெட்டவெளிச்சமாக்குகிறது. முக்கிய அரசியல் பதவி வகிப்போரைச் சந்திக்க அனுமதி கேட்பவர்கள், தம்மைப் பற்றிக் கொடுக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையைப் பரிசோதித்து, அவர்களின் பின்னணியை ஆராய வேண்டியது உளவுத் துறையின் பணிகளில் ஒன்று. வினோத்பாபு விஷயத்தில் உளவுத் துறை இதைச் செய்யத் தவறியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொழிற்சாலைகளில் பணி நேரக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம், பல தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் மதுபானங்கள் விநியோகத்துக்கு அனுமதி அளித்த அறிவிப்பிலும் எதிர்ப்புகளுக்குப் பிறகு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் கார் வெடிகுண்டு விபத்து உளவுத் துறை தோல்வியின் காரணமாகவே நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதும் கவனிக்கத்தக்கது.
முக்கியமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துவதற்கு முன்பு, அதுகுறித்து மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் மனநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கு உளவுத் துறையின் உதவியை நாடுவது வழக்கமாக அரசுகள் கடைப்பிடிக்கும் வழிமுறைதான். தன்னைத் திருப்திப்படுத்துவதற்காக ‘எல்லாம் சரியாகவே இருக்கிறது’ என்று தவறான தகவலைத் தந்த காரணத்துக்காக உளவுத் துறை அதிகாரிகளைக் கடுமையாகக் கடிந்துகொண்ட முதலமைச்சர்களும் உண்டு.
அப்படியிருக்க, கூட்டணிக் கட்சியினரே அதிருப்தி அடையக்கூடிய வகையில், இந்த அரசு சில முடிவுகளை விளைவுகளைக் கணிக்காமல் அறிவிப்பதும், எதிர்ப்பு எழுந்த பிறகு பின்வாங்குவதும் இனியும் தொடரக் கூடாது. அதற்கேற்ப உளவுத் துறையின் மனப்பான்மையையும், செயல்பாடுகளையும் சீரமைக்க வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு இருக்கிறது.
அதேபோல், உளவுத் துறை அளிக்கும் தகவல்கள் மேலிடத்தின் காதுவரை வந்து சேருகிறதா, அல்லது இடையில் ஏதேனும் சக்திகள் அவற்றை வாங்கி, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வடிகட்டி அனுப்புகின்றனவா என்பதை அவ்வப்போது முதலமைச்சரும் சரிபார்ப்பது நல்லது!