

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால், அவரது அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி-பாளையங்கோட்டை நெடுஞ்சாலைப் பகுதியில் நடக்கும் மணல் கொள்ளை குறித்து உயரதிகாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் புகார் அளித்து தன் கடமையைச் செய்ததற்காக லூர்து பிரான்சிஸ் சமூகவிரோதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்.
அரசு அதிகாரி ஒருவர், அரசு அலுவலகத்துக்கு உள்ளேயே படுகொலை செய்யப்பட்டிருப்பதைச் சட்டம்-ஒழுங்கு சீர்கேடாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. மணல் கொள்ளையர்களால் தனது உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக லூர்து பிரான்சிஸ் புகார் அளித்திருந்தும், அவருக்குப் பாதுகாப்பு அளிக்க காவல் துறை தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்ட அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்தவர்களை அகற்றியதில் முக்கியப் பங்காற்றியவர் லூர்து பிரான்சிஸ் என்றும், அதன் காரணமாக அவர்மீது தாக்குதல் முயற்சிகள் நடந்ததாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நினைவுகூர்ந்திருக்கிறார். ஆக, நிர்வாக உயரதிகாரிகள், காவல் துறையின் அலட்சியமும் இந்தக் கொலைக்குப் பங்களித்திருப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது.
தென் மாவட்டங்களுக்கு எனப் பிரத்யேகமாக மணல் குவாரியைத் திறக்கும் தமிழ்நாடு அரசின் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதமும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களுக்கு வழிவகுக்கிறது. தற்போது பெரும்பாலான கட்டிடங்கள் ‘எம்-சாண்ட்’ பயன்படுத்தியே கட்டப்படுகின்றன என்றாலும், கட்டுமானப் பணிகளுக்கு ஆற்று மணலைப் பயன்படுத்த விரும்புபவர்கள் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்களையே அணுகுகிறார்கள். இதனால் இந்தப் பிரச்சினை முடிவில்லாமல் தொடர்கிறது.
லூர்து பிரான்சிஸின் படுகொலை, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் பொதுச் சமூகத்திலும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. தவறு செய்யும் அதிகாரிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். மணல் கொள்ளையர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என கிராம நிர்வாக அலுவலருக்கு அழுத்தம் தந்த வருவாய் ஆய்வாளர்வரை, பல ஒழுங்கீனங்களைத் தமிழ்நாடு ஏற்கெனவே கண்டிருக்கிறது.
எனினும், தனது பணிக்கும் சமூகத்துக்கும் நேர்மையாக உழைக்கும் அரசு ஊழியர்கள் ஏராளம். இந்தச் சூழலில், அரசுக்கு உண்மையாகச் செயல்பட்டு, மணல் கொள்ளையர்கள் குறித்துப் புகார் அளித்த லூர்து பிரான்சிஸின் படுகொலை, அரசின் செயல்பாடுகள்மீதான நம்பகத்தன்மையைக் குலைக்கிறது.
லூர்து பிரான்சிஸின் வீரமரணத்துக்குப் பின்னர், அவர் நேர்மையானவர் எனும் புகழாரம் சூட்டப்படுகிறது; அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். இதுபோன்ற அடையாள அறிவிப்புகள், ஆறுதல் நடவடிக்கைகள் மட்டும் போதாது.
சமூகவிரோதச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தங்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் துணைநிற்கும் எனும் நம்பிக்கை ஏற்பட்டால்தான் எல்லா அதிகாரிகளும் துணிச்சலுடன் செயல்பட முன்வருவார்கள்.
லூர்து பிரான்சிஸின் கொலையுடன் தொடர்புடையவர்கள்மீது அரசு கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடவே, இதுபோன்ற கொடூரச் செயல்கள் மீண்டும் நிகழா வண்ணம் தடுக்க சட்ட நடைமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்.