

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் (ஏப்ரல் 13), ‘நிலவில் இருந்து பார்க்கும்போதும் தெரியும் வகையில், 100 ஏக்கர் பரப்பளவில் ‘தமிழ்' என்ற வார்த்தை அமைப்பில் மாதிரிக் காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும்’ என்கிற அறிவிப்பை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்டுள்ளார். தமிழுக்குப் பெருமை சேர்க்கும் முன்னெடுப்பு எனும் பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், உண்மையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.
நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் பின்னணியில், அவற்றை எதிர்கொண்டு தகவமைத்துக்கொள்ளும் வகையில் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன; அரசியலையும் உள்ளடக்கிய சவால்மிக்க பணிகள் அவை. ஆனால், ‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்’ என்கிற இக்காலகட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த துறையை நிர்வகித்துவரும் அமைச்சரின் இந்த அறிவிப்பு, காடு வளர்ப்புக்கோ தமிழ் வளர்ச்சிக்கோ நன்மை பயக்கப்போவதில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் சார்ந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் - அத்துறையின் பெயர் மாற்றம் தொடங்கி - தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ‘காலநிலை மாற்ற நிர்வாகக் குழு’ உருவாக்கம் அவற்றில் ஒன்று.
மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக, காலநிலை மாற்றம் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி திரட்டும் வகையில் ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதி’யைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது; ‘காலநிலை அறிவு இயக்கம்’ என்பது போன்ற முன்னெடுப்புகளும் பாராட்டத்தக்கவை. இத்தகைய பின்னணியில், வெறும் அடையாளத்துக்காக மேற்கொள்ளப்படும் ‘தமிழ்’ காடு போன்ற திட்டங்கள், உண்மையான செயல்பாடுகளிலும் சுணக்கத்தையே ஏற்படுத்தும்.
மறுபுறம், பெருநகரங்களில் சாலைப் போக்குவரத்தை முறைப்படுத்துவதும் புதிய காடுகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உண்டாகக்கூடிய நன்மைக்கு இணையானதுதான்.
முடிவுறாத பாலங்கள், செப்பனிடப்படாத சாலைகள், அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள், மூடப்படாத குழிகளின் காரணமாக அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் ஆங்காங்கே தேங்கித் திணறும் வாகனங்களும் அவை வெளியிடும் புகையும் இந்தப் போக்குவரத்துத் தேக்கத்தால் ஏற்படும் எரிசக்தி வீணடிப்பும் சுற்றுச்சூழலுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது. ஆகவே மக்களின் அன்றாடப் பிரச்சினையான சாலைப் போக்குவரத்தைச்சரி செய்வதில் போர்க்கால வேகத்தை இந்த அரசு காட்டினாலே அது சுற்றுச்சூழலுக்குச் செய்கின்ற மிகப் பெரும் நன்மையாகத்தான் இருக்கும்.
சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்தின் நெருக்கடிகள், தீவிரக் கவனம் கோரும் நம் காலத்தின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன; இவை எதிர்காலம்,எதிர்காலச் சந்ததியினர் சார்ந்தவையும்கூட.
ஆக, இப்பிரச்சினைகளுக்கு நாம் எப்படி முகம் கொடுக்கிறோம் என்பது அதை நோக்கிய நம் செயல்பாடுகளில் தான் உள்ளது. அவை பிரச்சினையைத் தீர்க்க வழிவகுக்க வேண்டுமே ஒழிய, வெற்றுஅடையாள அறிவிப்புகளால் மேலும் பின்னடைவை ஏற்படுத்திவிடக் கூடாது!
பெயர் வாங்கும் திட்டங்களில் கவனம் செலுத்துவதைவிட, காலத்துக்கும் பெயர் சொல்லும் திட்டங்களில் கவனம் செலுத்துவதே முக்கியமானது.