

பொதுச் சரக்கு, சேவை வரி நடைமுறைக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவடையப்போகின்றன. கடந்த ஆண்டு அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்தபடி, ஜிஎஸ்டி அமலுக்கு செப்டம்பர் 16 வரையில் அவகாசம் இருந்தது. ஆனால், மத்திய அரசு அவசர அவசரமாக ஜூலை 1 முதலே அவ்வரியை நடைமுறைக்குக் கொண்டுவந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த 75 நாட்களுக்குள் 100-க்கும் மேற்பட்ட பொருட்கள், சேவைகள் மீதான வரிகளில் மாற்றம் செய்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில். தொழில்துறையில் உற்பத்தி வளர்ச்சி ஜூலை மாதத்தில் 1.2% மட்டுமே அதிகரித் துள்ளது. இம்மோசமான நிலை தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்நிலையில், மத்திய அரசு, ஜிஎஸ்டி வரியைத் தீர்மானிப்பதில் தவறுகளைச் செய்திருக்கிறோம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்வதுதான் தவறுகளைத் திருத்திக்கொண்டு, சரியான பாதையில் செல்ல உதவும்.
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த முதல் மாதத்தில் வரிவசூல் கணிசமாக இருந்தது. வரி செலுத்தக்கூடியவர்களில் 70% பேர், பதிவுசெய்து செலுத்திய வரித்தொகை மட்டுமே ரூ.95,000 கோடிக்கும் அதிகமானது. இறுதியில் இது ரூ.1.2 லட்சம் கோடியாக வாய்ப்பிருக்கிறது. மத்திய-மாநில அரசுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட மறைமுக வரி வசூல் இலக்கு ரூ.91,000 கோடியைவிட இது அதிகம். அடுத்துவரும் மாதங்களிலும் இது தொடர வேண்டும். ஆகஸ்டில் மேலும் பலர் பதிவு செய்துள்ளதால், நிச்சயம் இது இலக்கைத் தாண்டும். வரி வருவாய் அதிகமானால் பல பொருட்கள் மீதான வரியைக் குறைக்கவும் வரிவிகித எண்ணிக்கையைக் குறைக்கவும் வழியேற்படும்.
ஜிஎஸ்டி வலைதளத்தில் வரிக் கணக்குகளைப் பதிவேற்றுவதில்தான் நிறுவனங்களுக்குப் பிரச்சினைகள் தொடர்கின்றன. அரசு இதை உடனே சரி செய்ய வேண்டும். அரசும் இதை உணர்ந்து வரிக் கணக்கு தாக்கலுக்கான கெடு தேதியை நவம்பர் 10-க்கு தள்ளிவைத்துள்ளது. இணையதள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய, மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு விரைவாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும்.
ஏற்கெனவே செலுத்திய வரியின் ஒரு பகுதியை அரசு திருப்பித் தரும் என்ற எதிர்பார்ப்பில் ஏராளமானோர் ‘ரிட்டர்ன்’களுக்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதைத் தாமதப்படுத்தி வருகின்றனர். ஏற்றுமதியாளர்களிடம் இந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. சுமார் 4 மாதங்களாகியும் அவர்களுக்குத் திருப்பித் தரவேண்டிய பணம் தரப்படாததால், அவர்களுடைய நடைமுறைச் செலவுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கும் காலமாக இருப்பதால் உற்பத்தியும் வர்த்தகமும் தடையில்லாமல் தொடர்வது அவசியம். மத்திய அரசும் இதை உணர்ந்து வருவாய்த்துறை செயலாளர் தலைமை யில் சிறப்புக் குழுவை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி தொடர்பாக தொழில்முனைவோர், வியாபாரிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை உடனுக்குடன் தீர்க்க, அரசு அக்கறை காட்ட வேண்டும். அப்படிச் செய்தால்தான் பொதுச் சரக்கு, சேவை வரிக்கு மாறியது அனைவருக்கும் நிம்மதியைத் தரும். அதற்கு அரசு தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் நேர்மையான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.