நீர்நிலை உயிரிழப்புகள்: இனிமேலும் தொடரக் கூடாது!

நீர்நிலை உயிரிழப்புகள்: இனிமேலும் தொடரக் கூடாது!
Updated on
1 min read

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி வைபவத்தை முன்னிட்டு, மூவரசம்பட்டில் உள்ள குளத்தில் இறங்கிய ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையைத் தருகிறது.

தனியார் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் சார்பாகக் கடந்த மார்ச் 28 முதல் பங்குனி உத்திர உற்சவம் நடைபெற்றுவருகிறது. பங்குனி உத்திரத்தன்று (ஏப்ரல் 5) தீர்த்தவாரி நிகழ்வில் அர்ச்சகர்கள், பக்தர்கள் உள்ளிட்ட 25 பேர் உற்சவர் சிலையைக் குளிப்பாட்டக் குளத்தில் இறங்கியுள்ளனர்.

அப்போது பக்தர்கள் இருவர் விவரம் தெரியாமல் ஆழம் நிறைந்த பகுதிக்குள் சென்றுவிட, அவர்களோடு சேர்த்து அவர்களைக் காப்பாற்றச் சென்ற மூவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இவர்கள் ஐவரும் 18லிருந்து 23 வயதுவரையிலான இளைஞர்கள் என்பது, இந்தத் துயர நிகழ்வு அளிக்கும் வேதனையைப் பன்மடங்காக்குகிறது.

கோயில் நிர்வாகத்தினர் தீர்த்தவாரி உற்சவம் குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால் தீயணைப்பு வாகனத்தை முன்கூட்டியே நிறுத்திவைத்து உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும் என்று தீயணைப்பு-மீட்புப் படையினர் கூறியுள்ளனர். பங்குனி உற்சவம் குறித்துத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் தீர்த்தவாரி நடத்தப்படவிருப்பது குறித்துத் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்கிறது காவல் துறை.

இதுகுறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதிலளித்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, ‘மூவரசம்பட்டு பஞ்சாயத்துக்குச் சொந்தமான குளத்தில் தீர்த்தவாரி நிகழ்த்தப்படுவது குறித்து அறநிலையத் துறைக்குத் தெரிவிக்கப்படவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். அதேபோல, ஏப்ரல் 4இல் சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன், நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது இன்னொரு கொடுமை.

இது போன்ற விபத்துகளுக்கு, சமூகத்தில் பல நிலைகளில் நிலவும் அலட்சியமும் கவனக்குறைவும் பெரும்பங்காற்றுவதை மறுக்க முடியாது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் தீர்த்தவாரி உற்சவத்தை நடத்தியது கோயில் நிர்வாகத்தினரின் குற்றம் என்றாலும் கடந்த மூன்றாண்டுகளாக நடப்பதாகச் சொல்லப்படும் பொது நிகழ்வு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்படுவதை உறுதிசெய்திருக்க வேண்டியது அரசின் கடமையும்கூட.

இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வேண்டுமென்றால் குளங்கள், ஏரிகள், நீச்சல் குளங்கள் குறித்த அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும். நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

நீர்நிலைகளைத் தனியார் அமைப்புகள் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களும் நீர்நிலைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

நீர்நிலைகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஓரளவு பரவலாகிவரும் சூழலில், நீர்நிலைகளில் மனித உயிர்கள் பறிபோவதைத் தடுப்பதில் நாம் மிகவும் பின்தங்கியிருப்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்தியிருக்கின்றன. இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது அரசு மற்றும் பொதுச் சமூகத்தின் கடமை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in