

த
மிழக முதல்வர் பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, மீண்டும் பெரும் புதைமணலில் சிக்கியிருக்கிறது பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. டெல்லியின் ஆசியைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளுநர் சட்டரீதியிலான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்குள் மீண்டும் ஆள் சேர்த்துவிடலாம் என்று பேரங்களில் ஈடுபட்டுவருகிறது பழனிசாமி அரசு. ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய கடந்த 9 மாதங்களில் அதிமுகவுக்குள் நடக்கும் வெளிப்படையான அதிகாரச் சண்டைகள், கோஷ்டிப் பிளவுகள், பேரங்கள், ஒருவர் மீதான ஒருவரின் அப்பட்ட மான ஊழல் குற்றச்சாட்டுகள், அதிமுகவின் மானத்தோடு தமிழக அரசியலின் கண்ணியத்தையும் கப்பலேற்றுகின்றன. கூடவே, தமிழக அரசின் செயல்பாடுகளும் ஸ்தம்பித்துவருகின்றன. சட்ட ரீதியிலான வியாக்கியானங்களைத் தாண்டி, முதலில் தார்மிக ரீதியாக இந்த அரசு பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டது என்பதற்கு முதல்வர் பழனிசாமி முகம் கொடுக்க வேண்டும்.
அதிமுக எனும் கட்சியை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தம்முடைய கைகளில் அவ்வளவு இறுக்கமான பிடியில் வைத்திருக்கக் காரணமாக இருந்தது, கீழே பொதுமக்களிடம் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு. அதன் வாயிலாகவே அவர்கள் கட்சி யையும் ஆண்டார்கள், கூட்டணிக் கட்சிகளைத் தங்கள் நகர்வுக்கேற்பத் தேர்ந்தெடுத்தார்கள். உள்ளூரில் மட்டும் அல்லாமல் டெல்லியோடும் பேரங்களையும் முடித்தார்கள். இன்றைய அதிமுகவின் புதிய தலைவர்களாக உருவெடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் மூவரில் ஒருவருமே இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக, பழனிசாமி யும் பன்னீர்செல்வமும் டெல்லியிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளை வைத்தே, மேலிருந்து கிடைக்கும் அதிகாரத்தை வைத்தே மீதமுள்ள நான்காண்டு ஆட்சிக் காலத்தையும் நிறைவுசெய்து விடலாம் என்று நம்பினால் அதைக் காட்டிலும் அபத்தம் ஒன்று இல்லை. கட்சியைப் பிரித்துக்கொண்டுவந்தபோது பன்னீர் செல்வத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் என்ன ஆதரவு இருந்தது; இன்றைக்கு அந்தச் செல்வாக்கு எப்படிக் கரைந்துபோயிருக்கிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்திக்கொண்டாலே மூவரும் தேர்ந்தெடுக்க வேண்டிய தெளிவான திசை தெரிந்துவிடும்.
ஒரு அரசியல் தலைவருக்கான, ஆட்சியாளருக்கான மிகப் பெரிய மூலதனம் நம்பகத்தன்மை. அந்த நம்பகத்தன்மையை இழப்பதைக் காட்டிலும் ஒரு அரசியல்வாதிக்குப் பேரிழப்பு ஏதும் இல்லை. ஆனவரை அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பது; அதற்காக எதையும் இழப்பது என்பதானது பெரும் இழிவு. பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கையும், வீதியில் அவர்கள் சொந்தக் கட்சியினராலேயே ஒவ்வொரு நாளும் வசை பாடப்படுகிறது. இதுவரை சேர்த்துவைத்த மொத்த அரசியல் மூலதனத்தையும் தாங்கள் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கண்ணியமாக ஆட்சியிலிருந்து விலகுங்கள். மக்களைச் சந்தியுங்கள்.