இலங்கை அரசியல் சட்டச் சீர்திருத்தம்: நம்பிக்கைகளும் அச்சங்களும்

இலங்கை அரசியல் சட்டச் சீர்திருத்தம்: நம்பிக்கைகளும் அச்சங்களும்

Published on

லங்கை அரசியல் சட்டச் சீர்திருத்தத்தின் ஒரு படியாக அரசியல் சட்ட நிர்ணய சபை நியமித்த வழிகாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. புதிய அரசியல் சட்டமானது இலங்கையின் அனைத்து இனத்தவருக்கும், அனைத்துப் பிரதேசங்களிலும் ஒரே மாதிரியாக அதிகாரத்தை அளித்து பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. அதே சமயம், தீவிரப்போக்கு கொண்ட தேசியவாதிகள் இந்த முயற்சிகளைத் தகர்த்துவிடுவார்கள் எனும் சந்தேகமும் நிலவுகிறது. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான வழிகாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கையை மிகுந்த எச்சரிக்கையோடுதான் வரவேற்க வேண்டியிருக்கிறது.

புதிய அரசியல் சட்டத்துக்கான அனைத்து முக்கிய அம்சங்களுடன், ‘பிளவுகள் இல்லாத – பிரிக்கப்பட முடியாத’ இலங்கைக்கான யோசனைகளும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சர்ச்சைக்குரிய வார்த்தைகளான ‘ஒற்றையாட்சி’ மற்றும் ‘கூட்டாட்சி’ போன்றவை தவிர்க்கப்பட்டு தமிழ், சிங்களம் இரண்டிலும், ‘பிரிக்கப்பட முடியாத’ என்பதற்கு என்ன வார்த்தை உண்டோ அதையே அரசியல் சட்ட முன்னுரையில் சேர்க்க வேண்டும் என்று குழு யோசனை தெரிவித்துள்ளது.

1990-களில் தொடங்கியே கூறப்படும் யோசனைகளுக்கேற்ப, ‘சட்டமியற்றும் அதிகாரம் படைத்த’ அதிபர் பதவியை ரத்து செய்வதுதான் நோக்கம் என அறிக்கை தெரிவிக்கிறது. மக்களுக்கான திட்டங்களை அமல்செய்வதில் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் அரசு அமைப்புக்கு முக்கியப் பங்கு இருக்க வேண்டும் என்கிறது வழிகாட்டுக் குழு. தேர்தல் முறையிலும் மாற்றம் தேவை என்கிறது.

இப்போது இலங்கையில் 100% விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பின்பற்றப்படுகிறது. அதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தின் 60% உறுப்பினர்கள், ஒரு தொகுதியில் மற்ற வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறும் முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும், மாகாணங்களின் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்றத்தில் இன்னொரு அவை உருவாக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறது. ஆனால், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை தேசியவாதிகள் விரும்பவில்லை.

இந்த அறிக்கையே புதிய அரசியல் சட்ட அமலில் ஒரு மைல்-கல், ஆனால் இன்னமும் அதிக நேரமும் உழைப்பும் தேவைப் படுகிற பணியில் இது ஆரம்பகட்டம். இலங்கையின் கட்டமைப்பில் பௌத்த மதத்துக்குத் தரப்பட்டுள்ள முதன்மை நிலை அப்படியே தொடரும் என்று அரசு வாக்குறுதி அளித்திருக்கிறது. இது பெரும்பான்மைச் சமூகத்தினரிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புகளை மட்டுப்படுத்த உதவும். கட்சி சார்பற்ற கருத்தொற்றுமை அடிப்படையில் புதிய அரசியல் சட்டம் இயற்றப்படுவதில் தங்களுக்குள்ள ஆர்வத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டணி வெளிப்படுத்தியிருப்பதும் நல்ல அறிகுறிதான்.

தேசியவாதிகள் வலியுறுத்தும் பிளவுபடுத்தும் கருத்துகளிலிருந்து விடுபட்டு, நாட்டின் அனைத்துப் பகுதி, இன மக்களுக்கும் சமத்துவத்தையும் சமரசத்தையும் அளிக்கும் வகையில் இலங்கை அரசு இனி செயலாற்ற வேண்டும் எனும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. அதைச் சாத்தியப்படுத்த வேண்டியது இலங்கையின் கடமை!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in