மருந்து விலையில் ஏன் இந்தப் பாரபட்சம்?

மருந்து விலையில் ஏன் இந்தப் பாரபட்சம்?
Updated on
2 min read

‘அரிய நோய்களுக்கான தேசியக் கொள்கை’யில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்து அரிய வகை நோய்களுக்குமான மருந்துகளை இறக்குமதி செய்ய, முழு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சிறப்பு மருத்துவத்துக்குத் தேவைப்படும் உணவு வகைகளுக்கும் இந்த வரிவிலக்கு பொருந்தும். கூடவே, பல்வேறு புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிஸுமாப் (கீய்ட்ரூடா) மருந்துக்கான அடிப்படைச் சுங்க வரியையும் அரசு ரத்துசெய்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து இந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் தனிநபர்களுக்குப் பலனளிக்கும் முக்கியமான நடவடிக்கை இது. மத்திய அல்லது மாநில சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மாவட்ட மருத்துவ அதிகாரி / மாவட்ட பொது அறுவைசிகிச்சை மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றுக்கொண்டால், இந்த வரிவிலக்கைத் தனிநபர்கள் பெற முடியும்.

அரிய வகை நோய்களுக்கான மருந்துகளும் உணவு வகைகளும் அதிக விலை கொண்டவை. பல லட்ச ரூபாய்க்கு மருந்துகள் விற்பனையாகின்றன. இந்தியாவில் இம்மருந்துகள் மிக அரிது என்பதால், பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதுதான் ஒரே வழி. இப்படியான சூழலில், அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

எனினும், அரிய வகை நோய்களுக்கான மருந்துகளில் காட்டும் அக்கறையை அத்தியாவசிய மருந்துகளில் அரசு காட்டத் தவறியிருப்பதுதான் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறத்தாழ 900 அத்தியாவசிய மருந்துகளின் விலையை 12% உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. அரிய வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிவிலக்கு ஏப்ரல் 1 அன்று அமலுக்குவந்த நிலையில், அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வும் அதே நாளில் அமலுக்கு வந்திருப்பது கூடுதல் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

வலிநிவாரணிகள், ஆன்டிபயாட்டிக்குகள், தொற்றுத் தடுப்பு மருந்துகள், இதயநோய் தொடர்பான மருந்துகள் உள்ளிட்டவற்றின் விலை தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கிறது. சாதாரணக் காய்ச்சல் தொடங்கி தொற்றுநோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இனி அதற்கு அதிக விலை கொடுத்து மருந்துகள் வாங்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே, அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களின் விலை உயர்வைச் சிரமத்துடன் எதிர்கொண்டிருக்கும் மக்கள், அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

மருந்துகளின் விலை ஒவ்வோர் ஆண்டும் உயர்த்தப்படுவதுதான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாகவே விலை அதிக அளவில் உயர்ந்துகொண்டே செல்வதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், கடந்த ஆண்டு அத்தியாவசிய மருந்துகளின் விலையில் 10.7% உயர்த்திக்கொள்ள அனுமதித்திருந்தது; இந்த முறை அது 12% என்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதிகபட்ச சில்லறை விலையைவிடவும் அதிகமாக விலை வைத்து மருந்துகள் விற்கப்படுவதாக ஏற்கெனவே புகார்கள் உண்டு. இதை முறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசை மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அவர்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது இந்த விலை உயர்வு. உயிர் காக்கும் மருந்துகளின் விலை இப்படி உயர்த்தப்பட்டிருப்பது சரியல்ல என அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. எனவே, அரசு இந்நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in