

வயநாடு மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால், மக்களவை உறுப்பினர் பதவியை இழந்திருப்பது அரசியல் களத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடகத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, மோசடி வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற தொழிலதிபர்கள் நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அவரது பேச்சு மோடி என்னும் குடும்பப் பெயரைக் கொண்டிருப்போரைப் புண்படுத்துவதாக பாஜக உறுப்பினர் பூர்ணேஷ் மோடி தொடர்ந்த அவதூறுக் குற்ற வழக்கில் ராகுல் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள சூரத் நீதிமன்றம், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்துள்ளது. மேல்முறையீடு செய்ய ராகுலுக்கு 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 102 (1)(e) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 ஆகியவற்றின் அடிப்படையில் மக்களவை உறுப்பினர் எனும் தகுதியை இழந்துவிட்டார் என மக்களவைச் செயலரிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு மறுநாளே வெளியானது. இதையடுத்து, பாஜக ஜனநாயக விரோதமாக நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
காங்கிரஸுடன் கடுமையாக முரண்படும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள்கூட பாஜகவுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றன. பாஜக உறுப்பினர்கள் சிலர் சிறுபான்மையினருக்கு எதிராக இழிவுபடுத்தியும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியபோது, உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்னும் கேள்வியும் எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா உள்படப் பலர் பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ராகுல் காந்தி பிரதமரைக் குற்றம்சாட்டுவதாக எண்ணிக்கொண்டு குறிப்பிட்ட ஒரு சமூகத்தை அவமரியாதை செய்து பேசியிருக்கிறார் என்பதுதான் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதற்கான காரணமே. அப்படியிருக்க, ‘நான் உண்மையைத்தான் பேசினேன். தொடர்ந்து பேசுவேன்' என்று அவர் கூறத் தொடங்கியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது எனப் புரியவில்லை.
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தி இயல்பாகவே தனதுநாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார் என்பதையும், நாடாளுமன்றத்திலிருந்து அது குறித்து அறிக்கை அளிக்கப்பட்டது சம்பிரதாயரீதியிலான நடவடிக்கையே என்று சுட்டிக்காட்டப்படுவதையும் கவனிக்க வேண்டும். அதன்படி ராகுலுக்கு நேர்ந்திருப்பது ‘தகுதி இழப்பு’தானே தவிர, ‘தகுதி நீக்கம்’ அல்ல என்றும் கொள்ள வேண்டியிருக்கிறது.
அரசையும் தலைவர்களையும் விமர்சிப்பதற்கான கருத்துச் சுதந்திரம் எந்தவொரு ஜனநாயகத்திலும் முக்கியமானது. அதே நேரத்தில், அரசியல் எதிரிகளை விமர்சிக்கிறோம் என்ற பெயரில், குறிப்பிட்ட ஒரு சாதியையோ, இனத்தையோ பொத்தாம்பொதுவாகக் கேவலப்படுத்திப் பேசுவது அநாகரிகத்தின் உச்சம்; தண்டனைக்குரிய குற்றம் என்பதை அனைவருமே இனியாவது உணர்ந்து நடக்க வேண்டும்.