

இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவுக் கூட்டத்தை நடத்த முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த 5-ம் தேதி கல்லூரி மாணவி வளர்மதி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. இதன் மூலம், பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்கள்மீது அரசு அடக்குமுறையை ஏவும் தருணங்களில், நீதிமன்றங்கள் துணைக்கு வரும் எனும் நம்பிக்கை உருவாகியிருக்கிறது.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சென்னை மெரினாவில் இளைஞர்களோடு பொதுமக்களும் ஒன்றுதிரண்ட நிகழ்வுக்குப் பிறகு, தமிழக அரசு எந்தவொரு போராட்டத்தையும் மூர்க்கமாகவே அணுகிவருகிறது. அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவுகிறது. போராட்டங்களுக்கான நியாயங்களை உணர்ந்து, அவற்றைச் சரிசெய்வதுதான் ஒரு ஜனநாயக அரசு செய்யவேண்டிய கடமை. மாறாக, பிணையில் வெளிவருவதற்கான வாய்ப்பை மறுக்கக்கூடிய குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போராட்டம் நடத்துபவர்களைக் கைதுசெய்வது, சட்டரீதியாக மட்டுமின்றி ஜனநாயகரீதியிலும் மிகவும் கொடுமையான நடவடிக்கை.
இந்நிலையில், சட்டங்களைத் தவறாகக் கையாளும் அரசின் இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்திருக்கிறது நீதிமன்றம். திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கூறியும்கூட, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வேண்டுமென்றே காலம் தாழ்த்த முயற்சித்தனர். மேற்கொண்டும் இத்தகைய காலம் தாழ்த்தும் நடவடிக்கைகளை நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.
சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும்போது நீதிமன்றங்களின் வழியாகப் பாதுகாப்பு பெறலாம் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது. ஆனால், நீதிமன்ற உத்தரவைப் பெறும்வரையில் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த சிறைத் தண்டனைக்கு என்ன பதில் சொல்ல முடியும்? வளர்மதி மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டதைத் தொடர்ந்து, அவர் படித்துவந்த பெரியார் பல்கலைக்கழகம் அவரை இடைநீக்கம் செய்ததும், அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னரே, அவரை மீண்டும் சேர்க்க விருப்பம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள், மாணவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கிறபோது, அவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது என்பதைப் பற்றி அரசுக்கு அக்கறை இல்லையா? சமூகச் செயல்பாட்டாளர்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்க இதுபோன்ற சட்டங்களை அஸ்திரமாக்கிக்கொள்ளலாம் என்று அரசு நினைக்கலாமா?
அரசின்மீது மக்கள் அதிருப்தி கொண்டு போராட்டக் களத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக சட்டங்களைத் தவறாகக் கையாள்வது, பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல. அது அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கவே செய்யும். இனியாவது, தமிழக அரசு ஜனநாயகரீதியில் செயல்பட வேண்டும். அரசியல் அச்சுறுத்தல்களுக்காக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பலியிட்டுவிடக் கூடாது!