

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த எட்டு நாள்களுக்கும் மேலாக எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் முடக்கப்படுவது வேதனைக்குரியது. 2023ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு மார்ச் 13 அன்று தொடங்கியதிலிருந்து நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எந்த விவாதமும் நடைபெறவில்லை.
இந்தியாவை அவமதிக்கும் வகையில் லண்டனில் ராகுல் காந்தி பேசியிருப்பதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர். தொழிலதிபர் கெளதம் அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்காவின் ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை எதிர்க்கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.
இதனால் ஏற்படும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை இரண்டும் தினமும் முடக்கப்படுகின்றன. இரண்டு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடரச் செய்வதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகிய இருவரும் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
இந்தியாவில் ஜனநாயகம் சரிந்துவருவதாக ராகுல் காந்தி லண்டனில் பேசியிருக்கிறார். இதை வைத்து ராகுல் காந்தி இந்தியாவை அவமதித்துவிட்டார் என்று ஆளும்கட்சியினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதற்காக அவர்மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரேந்திர மோடி உள்ளிட்ட முன்னாள், இந்நாள் பிரதமர்களே அந்நிய மண்ணில் இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளை விமர்சித்துப் பேசியிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட முடியாது. இதையும் தாண்டி, இந்த விவகாரத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்க வழிவகுக்கும் ஆளும்கட்சியினரின் போக்கு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு வலுசேர்ப்பதாக அமைவதையும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் உணர வேண்டும்.
மறுபுறம், ஜனநாயகச் சரிவுக்காக ஆளும்கட்சியின்மீது குற்றம்சாட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாமும் அதற்குப் பங்களிப்பதை உணர வேண்டும். அத்துடன் அதானி நிறுவனம் குறித்த முறைகேட்டுப் புகார்களை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்திருக்கும் நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையைத் தீவிரமாக வலியுறுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள் முன்னுரிமை அளிக்கவில்லை என்னும் விமர்சனத்துக்கு இடமளித்துவிடக் கூடாது.
இந்த அமர்வு ஏப்ரல் 6 அன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் முடங்குவதால் தினமும் அரசுக்கு ரூ.3 கோடி வீணாவதாகவும் அதனால் நடப்புக் கூட்டத்தொடரை மார்ச் 29 அன்றே முடித்துவிட முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதை அனுமதிப்பது மிகப்பெரிய ஜனநாயகச் சீரழிவு. ஆளும்கட்சி, எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் தமது ஜனநாயகப் பொறுப்பை உணர்ந்து எஞ்சிய நாள்களிலாவது நாடாளுமன்ற அவைகளில் பட்ஜெட், மானியக் கோரிக்கைகள் ஆகியவை மீதான விவாதங்கள் நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.